தேசிய கொடியான ஜாலோர் கெமிலாங்கை அவமதிப்போரை சிறையிடும் வகையில் குற்றவியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுவதற்கான காரணங்களில் ஆகஸ்ட் மாதம் சாங்-சாகா மலாயா கொடி பறக்கவிடப்பட்ட சம்பவமும் ஒன்று.
சட்டத் திருத்தத்தை இரண்டாவது வாசிப்புக்குத் தாக்கல் செய்த பிரதமர்துறை அமைச்சர் நன்சி சுக்ரி, அது “மிக வருத்தமளிக்கும்” சம்பவமாகும் என்றும் நடப்புக் குற்றவியல் சட்டப்படி அச்சம்பவத்துக்காக யாரையும் தண்டிக்க முடியவில்லை என்றும் கூறினார்.
“மேர்தேகாவுக்கு முதல்நாள், ஒரு கூட்டத்தினர் சாங் சாகாவைப் பறக்கவிட்டு அதுதான் மலேசிய கொடி என்று கூறிக்கொண்டனர். நாட்டின் கவுரவமே அதனால் அவமதிக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமில்லை. அது மிகவும் வருத்தமளித்தது”, என்றார்.
புதிய சட்டத் திருத்தம், ஜாலோர் கெமிலாங்கைக் காலடியில்போட்டு மிதித்தாலோ, மலேசியக் கொடி என்று சொல்லிக்கொண்டு வேறு கொடிகளைப் பறக்கவிட்டாலோ ஐந்தாண்டுகளுக்குக்க் குறையாத 15 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத்தண்டனை விதிக்க வகை செய்கிறது.