மார்ச் 8 நூலுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதி மறுக்கப்பட்டது

K. Arumugam _March 8“முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும் என்பதனையும், பலிக்குப் பலி என்பது அனைவரையும் குருடனாக்கும் என்பதனையும் கருத்தில் கொண்டு” 2001 ஆம் ஆண்டில் இந்நாட்டை உலுக்கிய கம்போங் மேடான் சம்பவத்தை, அதனால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களுக்கு மருத்துவ மற்றும் இதர உதவிகள் வழங்கியவர்களின் வாயிலாக அறிந்த தகவல்கள் அடிப்படையில், “மார்ச் 8” என்ற ஒரு நூலாக எழுதி கா. ஆறுமுகம் 2006 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.

பொறியாளரும் வழக்குரைஞருமான கா. ஆறுமுகம் மலேசிய தமிழ் அறவாரியத்தின் ஆலோசகரும் மனித உரிமை கழகமான சுவாராமின் தலைவரும் ஆவார்.

மார்ச் 8 நூலுக்கு அரசாங்கம் தடை விதித்தது. அத்தடையை அகற்றக் கோரி அந்நூலின் ஆசிரியர் கா. ஆறுமுகம் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்நீதிமன்றம் அரசாங்கம் விதித்திருந்த தடையை நிலைநிறுத்தியது.

அத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிலும் அந்நூலுக்கு விதிக்கப்பட்ட தடையை நிலைநிறுத்திய கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நிலைநிறுத்தப்பட்டது.

இறுதியில், இவ்வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு (பெடரல் நீதிமன்றம்) கொண்டு செல்வதற்கு அனுமதி கோரும் மனுவை (Leave application) கா. ஆறுமுகத்தின்  வழக்குரைஞர்கள் பதிவு செய்தனர்.

நேற்று (அக்டோபர் 22, 2013) அனுமதி கோரும் அம்மனு மீதான விசாரணையை நீதிபதிகள் அஹமட் பின் ஹாஜி மரோப், ஹசான் பின் லா, ஸாலேஹா பிந்தி ஸாகாரி, ஜெப்ரி டான் கோக் வா மற்றும் ரம்லி பின் ஹாஜி அலி ஆகியோர் செவிமடுத்தனர்.

வாதியான கா. ஆறுமுகத்தின் சார்பில் ஃபாரி அஸ்ஸாட், எட்மண்ட் போன், சான் என் ஹூய் மற்றும் ஜோசுஹா தே ஆகியோர் வாதத்தொகுப்பைச் செய்தனர்.

இருதரப்பினரின் வாதத்தொகுப்பைச் செவிமடுத்த நீதிபதிகள் நீதிமன்ற நீதிபரிலான சட்டம் 1964, செக்சன் 96 இல் கோரப்பட்டிருக்கும் தொடக்க நிலை தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. ஆகவே, மேல்முறையீடு செய்வதற்கான அனுமதி கோரும் மனுவை ஏகமனதாக நிராகரிப்பதாக அறிவித்தனர்.

 

 

TAGS: