அரண்மனை மொழி மாற்றம் பெற வேண்டும்: சைட் ஹுசின் அலி

Book lauch - Syed Husin Aliஜனநாயகத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அரண்மனை மொழி சீரமைப்புச் செய்யப்படுவது அவசியமாகிறது என்று பிகேஆர் முன்னாள் துணைத் தலைவர் செனட்டர் சைட் ஹுசின் அலி கூறினார்.

இன்று பிற்பகல், பெட்டாலிங் ஜெயாவில் அவர் எழுதிய “The Malay Rulers: Regression or Reform”,  என்ற புதிய நூல் வெளியிடப்பட்டது. அந்நிகழ்ச்சியில் உரையாற்றிய ஹுசின், தற்போது பயன்படுத்தப்படும் அரண்மனை மொழி மலாய்க்காரர்களை தாங்களாகவே தாழ்மைப்படுத்திக்கொள்ளும் நிலைக்கு கொண்டு செல்லக்கூடும் என்றாரவர்.

அரண்மனை மொழியில் பயன்படுத்தப்படுகின்ற சொற்கள் மலாய் சமூகத்தினரிடையே அடிமைத்தனம் ஊறுவதற்கு இட்டுச் சென்றுள்ளது என்று அவர் நம்புகிறார்.

“ஒரு கட்டத்தில், பகாங் சுல்தான் “பெட்டா” என்ற சொல்லை பயன்படுத்தவில்லை. அவர் “சயா” என்று கூறினார். அது ஒரு நல்ல தொடக்கம் என்று நான் கருதினேன்.

“உண்மையில்,  “பெட்டா” மற்றும் :துவாங்கு” என்ற சொற்களுக்கு மாறாக சயா என்பது பொதுவாகப் பயன்படுத்தப்பட வேண்டும்”, என்று முன்னாள் பேராசிரியரான ஹுசின் கூறினார்.

“பெட்டா” என்ற சொல் “நான்” அல்லது “என்னை” என்று அர்த்தமாகும். ஆனால், முடியரசர்கள் மட்டுமே அதைப் பயன்படுத்தலாம்.Book lauch - Syed Husin Ali1 அதேசமயம், “துவாங்கு” என்ற சொல்லும் “மாட்சிமை தங்கிய” என்ற அதே அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அச்சொல்லின் அர்த்தப்படி அது “எனது எஜமானர்” என்றாகும்.

“துவாங்கு” என்ற சொல்லின் பயன்பாடு எஜமானர்-அடிமை என்ற தொடர்புமுறையைக் கொண்டதாகும். இது போன்ற சொற்கள் அரண்மனை மொழி முழுவதிலும் ஊடுருவியுள்ளது என்று ஹுசின் வாதிட்டார்.

எடுத்துக்காட்டு: அரசர்களிடம் பேசும் போது பயன்படுத்தப்படும் “பாதிக்” என்ற சொல்லுக்கான அர்த்தம் “நாய்” என்பதாகும். “மென்ஜுன்ஜுங் டூளி துவாங்கு” என்ற சொல்லின் அர்த்தப்படி அரசரின் கால்களை ஒருவரின் தலையில் தூக்கிக்கொள்வதாகும்.

“வேறுவிதமாகச் சொன்னால், நம்மை நாமே தாழ்த்திக்கொள்கிறோம், சீரழித்துக்கொள்கிறோம். இது மனதளவிலும் பண்பளவிலும் மலாய்க்காரர்களை மிகுந்த விசுவாசிகாளாக்கியுள்ளது”, என்று சைட் ஹுசின் அலி கூறினார்.

பெட்டாலிங் ஜெயா சமூக நூல்நிலையத்தில் இந்நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் அரசமைப்புச் சட்ட வல்லுனர் அப்துல் அசிஸ் பாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.