எஸாம், இப்ராஹிம் ஆகியோருடன் எங்களுக்கு தொடர்பு இல்லை, பேரணி ஏற்பாட்டாளர்கள்

இந்த வார இறுதியில் நடத்தப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் ஒரு மில்லியன் முஸ்லிம்கள் பேரணிக்கு (Himpunan Sejuta Umat) அரசியல் தொடர்புகள் ஏதும் இல்லை என்றும் எந்த ஒரு அமைப்பையும் அது தாக்கவில்லை என்றும் அதன் ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

அந்தப் பேரணியை அரசியல் மயமாக்குவதற்கும் அதற்கு ‘மறைமுகமான நோக்கம்’ எதனையும் முன் வைப்பதற்கும் மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியும் நிராகரிக்கப்படும் என அதன் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் முகமட் அஸ்மி அப்துல் ஹமிட் சொன்னார்.

“இந்த முயற்சி, எந்த ஒரு தரப்பின் மறைமுகமான நோக்கங்களுக்கு  பலியாயாவதை நான் அனுமதிக்க மாட்டேன். நான் அந்த வகையில் உறுதியாக இருப்பேன்,” என்றார் அவர்.

அந்த நிகழ்வில் தாம் பேசப் போவதாக கூறியுள்ள கூலிம் பண்டார் பாரு எம்பி சுல்கிப்லி நூர்டின் உட்பட சர்ச்சைக்குரிய பல அரசியல்வாதிகளுக்கும் அந்த நிகழ்வுக்கும் எந்தத்  தொடர்பும் இல்லை என முகமட் அஸ்மி தெளிவுபடுத்தினார்.

“பேரணி தலைமைத்துவத்தில் சுகிப்லியோ, செனட்டர் எஸாம் முகமட் நூரோ, பாசிர் மாஸ் எம்பி இப்ராஹிம் அலியோ சம்பந்தப்படவில்லை. அவர்கள் அந்த நிகழ்வில் உரையாற்றப் போவதுமில்லை.”

“அந்தப் பேரணி தொடர்பாக அவர்கள் விடுக்கும் எந்த அறிக்கையும் ஏற்பாட்டாளர்களுடன் சம்பந்தப்பட்டது அல்ல,” என்றார் முகமட் அஸ்மி.