குளுவாங் எம்பி தீபாவளி சந்தைக்குள் நுழையவிடாமல் தடுக்கப்பட்டார்

Siladas - Kluangஇவ்வாண்டு தீபாவளிக்கு முந்திய நாள் (நவம்பர் 1) குளுவாங்,  ஜாலான் ஸ்டேசனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தீபவளி பசாருக்கு வருகை மேற்கொண்டு அங்கு சென்ற குளுவாங் நாடாளுமன்ற உறுப்பினர் லியுவ் சின் தோங், மெங்கிபோல் சட்டமன்ற உறுப்பினர் டான் ஹோங் பின் மற்றும் வழக்குரைஞர் கே.சீலதாஸ் ஆகியோர் அச்சந்தைக்குச் சென்ற போது அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

சந்தையின் நுழைவாயிலில் மஇகாவினர் என்று கூறிக்கொண்ட சிலர் சின் தோங் மற்றும் ஹோங் பின் ஆகிய இருவரும் உள்ளே செல்லவிடாமல் தடுத்தனர். அவர்கள்தான் அக்கடைகளை அமைத்தவர்கள் என்றும் அந்த அடிப்படையில் அவர்களிடம் சின் தோங் ஹோங் பின் ஆகியவர்களின் வருகை குறித்து முன்னதாக தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறிக்கொண்டனர் என்று கே. சீலதாஸ் நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

வழக்குரைஞரான கே. சீலதாஸ் குளுவாங் வாசியாவார். அவர் 1960களில் டிஎபியின் ஜொகூர் மாநில செயலாளராக இருந்தவர்.

இது ஒரு பொதுச் சாலை. இங்கு தாம் செல்ல முடியும் என்று சின் தோங் அவர்களிடம் அடக்கமாகச் சுட்டிக் காட்டினார். அதனை ஏற்க மறுத்த அவர்கள் கடும் தொனியில் பேசியதோடு இது மஇகாவின் ஏற்பாட்டிலான ஒரு நிகழ்ச்சி என்றும் வாதிட்டதாக சீலதாஸ் கூறுகிறார்.

part4 1 siladass“சின் தோங் மற்றும் ஹோங் பின் ஆகியோர் என்னுடன் வருகின்றனர் என்று அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு அவர்கள் நான் உள்ளே போகலாம். ஆனால், சின் தோங், ஹோங் பின் மற்றும் அவர்கள்டைய நண்பர்களும் உள்ளே போக முடியாது என்றனர். அதன் பின்னர், மஇகா தொகுதித் தலைவர் என்று கூறிக்கொண்ட ராமன் என்ற ஒருவர் வெறித்தனமாகக் கத்தினார்.

“ராமன் இப்படி வெறித்தனமாகக் கத்திக் கொண்டிருக்கையில், அவர்களில் ஒருவர் புகைப்படக்காரர்களை நோக்கி படம் எடுக்கக் கூடாது என்று தேசிய மொழியில் கத்தினார்”, என்று சீலதாஸ் கூறுகிறார்.

சின் தோங் மற்றும் ஹோங் பின் ஆகியோர் ஜாலான் ஸ்டேசனில் தடுத்து நிறுத்தப்பட்டது இந்திய மற்றும் மலேசிய பண்பிற்கு முற்றிலும் முரணானது என்று கூறிய சீலதாஸ், ஜாலான் ஸ்டேசன் மஇகாவின் தனிப்பட்ட சொத்தல்ல என்பதோடு அங்கு மஇகா உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்ற அறிவிப்பு எதுவும் வைக்கப்படவில்லை என்றார்.

திருநாள் காலங்களில், அதுவும் மலேசியாவில், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையும் சட்டமன்ற உறுப்பினரையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக தெருவில் வழியை அடைத்துக் கொண்டு தடை செய்வது வெறுக்கத்தக்கச் செயல் என்பதோடு தீபாவளிக்கான மலேசிய மனப்பாங்கிற்கு ஏற்றதல்ல என்று சீலதாஸ் மேலும் கூறினார்.

இந்திய வழி வந்த மலேசியன் என்ற முறையில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை சில சக மலேசியர்கள் அவ்வாறான வெறுக்கத்தக்க முறையில் நடந்து கொண்டது குறித்து தாம் வெட்கப்படுவதாக சீலதாஸ் கூறுகிறார்.