பாஸ் இளைஞர்கள்: ‘செலவுமிக்க’ இடைத்தேர்தல்கள் வேண்டாமே

1-pasAஇடைத் தேர்தல்கள்,  பெரும்பாலும்  “செலவுமிக்கவை” என்பதாலும்  பொதுவளங்களும் வீண் விரயமாகின்றன என்பதாலும் அவற்றைக் கைவிட்டு விடலாம் என்று பாஸ் இளைஞர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

ஒவ்வொரு இடைத் தேர்தலும் போட்டியிடும் கட்சிகளுக்கு மிகுந்த பொருள்செலவை ஏற்படுத்துகிறது என்று பாஸ் இளைஞர் பகுதி நிர்வாக மன்ற உறுப்பினர் சுஹாய்சான் கயாட் கூறினார்.

திங்கள்கிழமை நடந்து முடிந்த சுங்கை லிமாவ் இடைத் தேர்தலின்போது அத்தொகுதிக்காக அரசாங்கம் ரிம15 மில்லியனைச் செலவிட்டதாக மலேசியாகினியில் வெளிவந்த செய்தியை அவர் சுட்டிக்காட்டினார்.

“அதில், தேர்தல் ஆணைய அதிகாரிகள், போலீஸ், தகவல்துறை அதிகாரிகள், தேர்தல் பணியாளர்கள் என 12-நாள் தேர்தல் பரப்புரைக் காலத்தின்போது பயன்படுத்திக் கொள்ளப்பட்ட மனிதசக்தி சேர்க்கப்படவில்லை”, என சுஹாய்சான் ஓர் அறிக்கையில் கூறி இருந்தார்.

தேர்தல்களின்போது பல சச்சரவுகளும் ஏற்படுகின்றன.

எனவே, ஒரு தொகுதியின் பிரதிநிதி இறந்துபோனால் இடைத் தேர்தல் நடத்துவதை நிறுத்திவிட்டு  கடந்த பல தேர்தல்களில் வாக்காளர்கள் எந்தக் கட்சியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று பார்த்து அந்தக் கட்சியிடமே காலியான தொகுதியை ஒப்படைத்து விடலாம் என்றாரவர்.

இது பற்றி பல்வேறு கட்சிகளும் கலந்துரையாட வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.