சனிக்கிழமை நடத்தப்படும் ‘ஒரு மில்லியன் முஸ்லிம்கள் பேரணியில்’ பாஸ் இளைஞர் பிரிவு கலந்து கொள்ளும். இஸ்லாத்தை ‘பாதுகாக்கவும் தற்காக்கவும் போராடவும்’ முஸ்லிம்களை ஒன்றுபடுத்தும் முயற்சிகளை ஆதரிப்பதாக அது கூறியது.
மதம் மாற்ற எதிர்ப்பு பேரணி ‘புனிதமான முயற்சி’ என்றும் அதனை அனைத்து முஸ்லிம்களும் ஆதரிக்க வேண்டும் என்றும் இன்று விடுத்த அறிக்கையில் பாஸ் இளைஞர் தலைவர் நஸ்ருதின் ஹசான் கேட்டுக் கொண்டார்.
அந்த நிகழ்வுக்கான இணையத் தளத்தில் குறிக்கப்பட்டுள்ள கிறிஸ்துவமய எதிர்ப்பு பற்றி அவர் தமது அறிக்கையில் ஏதும் குறிப்பிடவில்லை. அந்த பேரணியின் முக்கியமான நோக்கம் “இஸ்லாமிய சமயத்தை மேம்படுத்தவும் தற்காக்கவும் முஸ்லிம்களைத் தூண்டுவதாகும்” என அவர் சொன்னார்.
தங்கள் சமயத்துக்கு ஏற்படக்கூடிய எந்தப் பாதிப்பையும் “எதிர்கொண்டு சமாளிக்க முஸ்லிம்களை தயார் நிலையில்” வைக்கும் பொருட்டு முஸ்லிம் சமூகத்தை ஒன்றுபடுத்துவதும் பேரணியின் நோக்கம் என்றும் நஸ்ருதின் சொன்னார்.
பாஸ் கட்சியின் அரசியல் பிரிவு இன்றிரவு முடிவு செய்யும்
பாஸ் இளைஞர் பிரிவு எடுத்துள்ள முடிவு, ஷா அலாம் அரங்கில் நடைபெறவிருக்கும் அந்த பேரணியின் நோக்கம் மற்ற சமயங்களைத் தாக்குவது என்றால் அதனைத் தான் ஆதரிக்கப் போவதில்லை என சிலாங்கூர் பாஸ் நேற்று அறிவித்ததற்கு மாறாக அமைந்துள்ளது.
மதச்சார்பற்ற போக்கு, இனவாதம் உட்பட மற்ற பல சவால்களை இஸ்லாமிய சமயம் எதிர்நோக்குவதாகக் குறிப்பிட்ட சிலாங்கூர் பாஸ் ஆணையாளர் டாக்டர் அப்துல் ரானி ஒஸ்மான்,
முஸ்லிம்களைக் கிறிஸ்துவ மயமாக்குவது பற்றி மட்டும் கவனம் செலுத்துவதால் வெவ்வேறு சமயங்களுக்கு இடையில் பகைமையை உருவாக்கும் என்றார்.
ஒர் அரசியல் நோக்கத்துக்கான முன்னணியாக அந்த நிகழ்வு இருக்கக் கூடும் என்றும் தாம் கவலைப்படுவதாகவும் அப்துல் ரானி தெரிவித்தார்.
இதனிடையே அந்தப் பேரணி குறித்து பாஸ் அரசியல் பிரிவு இன்றிரவு விவாதிக்கும் என அந்தக் கட்சியின் ஏடான ஹராக்கா அறிவித்துள்ளது.
பெரும்பாலும் இரவு 11 மணி வாக்கில் முடிவு தெரியவரும்.