பதாதை தயாரிக்கும் நிறுவனம் அதன் இயக்குனரிடம் கையூட்டு கேட்டதாகக் கூறும் நபரை அடையாளம் காட்ட வேண்டும் என டிஏபி எம்பி ஒருவர் “இறுதி எச்சரிக்கை” விடுத்துள்ளார்.
2008 பொதுத் தேர்தலின்போது டிஏபி வேட்பாளர் ஒருவர் Banner King நிறுவனத்திடம் 30 விழுக்காடு கையூட்டு கேட்டதாக அதன் இயக்குனர் சான் பூன் தொங், கூறியிருந்தார்.
“அவர் 24 மணி நேரத்துக்குள் அந்நபரின் பெயரைத் தெரிவிக்க வேண்டும்”,என தஞ்சோங் எம்பியும் மாநில டிஏபி செயலாளருமான இங் வை ஏக் கூறினார்.
கட்சி, அதன் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பொறுத்துக்கொண்டிருக்காது என்றாரவர்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டைச் சுமத்தும் சான்மீது கெராக்கான், மசீச தலைவர்கள் மிகுந்த அக்கறை காட்டுகிறார்கள் என்றும் டிஏபிக்கு எதிராக போலீஸில் புகார் செய்யுமாறுகூட பிஎன் தலைவர்கள் அவரிடம் கூறியுள்ளனர் என்றும் இங் குறிப்பிட்டார்.
“இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், திரைக்கதை, வசனகர்த்தாகள் எல்லாமே அவர்கள்தான்”, என்று குத்தலாகக் குறிப்பிட்டார் அவர்.

























