தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எங்கே? பக்காத்தான் எம்பிகள் கேள்வி

kasturiபக்காத்தான் ரக்யாட் எம்பிகளின் தொகுதிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டதாக அரசாங்கம் கூறினாலும் அந்த நிதியைக் கண்ணால் பார்க்க முடிவதில்லை என்கிறார் பத்து கவான் எம்பி கஸ்தூரி பட்டு.

அந்த நிதி ஒதுக்கீடு மாநில மேம்பாட்டு அதிகாரிகள் (எஸ்டிஓ) வழியாக வழங்கப்பட வேண்டும். ஆனால், இதுவரை அந்நிதி எதிரணி எம்பிகள் கைக்குக் கிடைக்கவில்லை.

“அதைவிடவும் அதிர்ச்சிதரத்தக்கது என்னவென்றால், அந்த நிதி பக்காத்தான் வசமுள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் உள்ள அம்னோ தொகுதித் தலைவர்களிடம் வழங்கப்படுவதுதான்”,என்றவர் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாண்டு மே 22-இலிருந்து அந்நிதி வழங்கப்பட்டு வருகிறது எனப் பிரதமர்துறை அமைச்சர் ஷஹிடான் காசிம்  நாடாளுமன்றத்தில் கூறியதற்கு எதிர்வினையாற்றிய கஸ்தூரி இவ்வாறு கூறினார்.

“அந்நிதியை, பிஎன் அரசியல் கட்சிகள் வழியாக அல்லாமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்காத்தான் எம்பிகளிடம்  நேரடியாக வழங்குவதுதான் முறையாகும்”, என்றாரவர்.

“பக்காத்தானுக்கு வாக்களித்த 51 விழுக்காடு வரிசெலுத்தும் மக்களுக்கு அந்த நிதியைப் பெறும் உரிமை உண்டு.  அதை அம்னோ தொகுதித் தலைவர்களிடம் வழங்குவது மக்களின் நம்பிக்கைக்கு செய்யும் துரோகமாகும்”. என்றார்.