ரித்வான் டீ மீது பல புகார்கள் கூறப்பட்டாலும் அவர் பேராசிரியராக பதவி உயர்வு

ridhuanஉத்துசான் மலேசியா பத்தி எழுத்தாளரான யுனிவர்சிடி பெர்தஹானான் நேசனல் மலேசியா (யுஎன்பிஎம்) விரிவுரையாளர் ரித்வான் டீ (இடம்), சாதாரண விரிவுரையாளர் என்ற நிலையிலிருந்து பேராசிரியராக பதவி உயர்த்தப்பட்டிருக்கிறார்.

இதனை அவரின் முன்னாள் சகாவும் பினாங்கின் டிஏபி செனட்டருமான அரிபின் ஒமார், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார். ரித்வான் தம் ஆய்வுக்கட்டுரைகளுக்காக மற்றவர்களின் எழுத்துகளைத் திருடும் பழக்கம் உள்ளவர் என்று அரிபின் கூறினார். அவர்மீதுள்ள இப்புகார்களைப் பல்கலைக்கழகமும் ஆராய்ந்தது உண்டு.

“ஆனால், துணை வேந்தர் அதையெல்லாம் பெரிதுபடுத்தவில்லை. அவருக்குப் பதவி உயர்வு கிடைத்துள்ளது. இது கல்வியாளர்களின் கன்னத்தில் ஓங்கி அறைந்தது போலிருக்கிறது”, என்று அரிபின் குறிப்பிட்டார்.

செய்தியாளர் கூட்டத்தில் இருந்த சிபூத்தே எம்பி தெரேசா கொக், ரித்வான் 2010-இல் தம் கல்விசார்ந்த கட்டுரையொன்று எழுதியபோது அதற்கு அய்ரில் யஸ்ரின் முகம்மட் யாசின் என்பார் எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகளைத் திருடினார் என்றார்.

அய்ரிலின் கட்டுரை அவரது வலைப்பதிவில் 2009-இல், வெளியாகி இருந்தது. அந்தக் கட்டுரையை அப்படியே திருடிய ரித்வான் அதில் இருந்த இலக்கணப் பிழைகளைக்கூட திருத்தாமல் விட்டிருந்தார் என்று கூறி அவ்விரண்டு கட்டுரைகளையும் காண்பித்தார் தெரேசா.

“இந்த விவகாரத்தை விடப்போவதில்லை. கல்வி அமைச்சுக்கு எழுதுவோம்”, என்றாரவர்.