டிஏபி: கார் வயது கொள்கையில் அரசாங்கம் பல்டி அடித்தது

1-theresaகார்களுக்குக் காலவரம்பு கட்டும் எண்ணம் அரசாங்கத்துக்கு இருப்பதாகக் கூறப்படுவதைப் போக்குவரத்து அமைச்சு  மறுத்திருப்பது, ஏற்கனவே இடைக்கால போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுடின் உசேன்  அறிவித்திருந்த கொள்கையிலிருந்து அது பின்வாங்குவதைக் காண்பிக்கிறது. சி பூத்தே டிஏபி எம்பி தெரேசா கொக் இவ்வாறு கூறினார்.

அரசாங்கம் அப்படி ஒரு கொள்கையைக் கொண்டுவர  என்றுமே எண்ணியதில்லை என போக்குவரத்து துணை அமைச்சர் அப்துல் அசீஸ் கப்ராவி நேற்று  கூறியிருந்தார். மேலும் அது எதிரணியினர் “கட்டிவிட்ட கதை” என்றும் கூறினார்.

ஆனால், ஹிஷாமுடின், செவ்வாய்க்கிழமை கார்களுக்கு 12-ஆண்டு வயது வரம்பை நிர்ணயிக்கும் கொள்கையைக் கொண்டுவர அரசாங்கம் திட்டமிடுவதாகக் கூறினார் என்று வெளிவந்த செய்திகளை கொக் சுட்டிக்காட்டினார்.

இணைய செய்தித்தளமான மலேசியன் இன்சைடரில் ஹிஷாமுடின் அவ்வாறு கூறினார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அப்படி இருக்க, அசீஸ் எதிரணியினர்மீது பழி போடுவது ஏன் என கொக் வினவினார்.

“மக்களின் கடும் எதிர்ப்பைக் கண்டு அரசாங்கம் பல்டி அடித்துள்ளது. அதுதான் உண்மை”, என்றார்.