இந்தியர்களின் குறைதீர்க்க ‘பாட்டி வைத்தியமா’ சொல்கிறீர்? ஷஹிடான்மீது ஜஸ்பால் பாய்ச்சல்

1 indianஇந்திய சமூகத்தின் குறைதீர்க்க பாட்டி வைத்தியம் சொல்லும் வேலையெல்லாம் வேண்டாம் என மஇகா தலைவர் ஒருவர் ஷஹிடான் காசிமை வன்மையாகக் கண்டித்தார்.

இந்தியர்கள் அரசாங்கக் கொள்கையில் குறைகாணாமல் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ள வேண்டும் என்று ஷஹிடான் நேற்று நாடாளுமன்றத்தில் கூறி இருந்ததன் தொடர்பில் செனட்டர் ஜஸ்பால் சிங் தம் ஆத்திரத்தை இவ்வாறு காட்டினார்.

ஷஹிடான், மற்றவற்றோடு வெற்றிபெற்ற இந்தியர்கள் சமூக- பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இந்தியர்களைக் கைதூக்கி விட வேண்டும் என்று கூறினார்.

1 indian1அதைப் பிடித்துக்கொண்ட ஜஸ்பால், “வசதியாக இருப்பவர்கள் வசதி இல்லாதவர்களுக்கு உதவுவார்கள் என்பதை ஷஹிடான் எங்கிருந்து கண்டுபிடித்தார்? இதுதான்  அவரின் பாட்டி வைத்தியமா?

“ஷஹிடான் சொல்லும் உருப்படாத யோசனை பலிக்குமென்றால் அரசாங்கங்களுக்குத் தேவையே இருக்காதே”, எனவும் அந்த மஇகா பொருளாளர் சாடினார்.

இந்தியர்களிடையே மருத்துவர்கள், வழக்குரைஞர்கள் எண்ணிக்கை உயர்வாக இருப்பதை  ஷஹிடான் சுட்டிக்காட்டி இருப்பது பற்றியும் ஜஸ்பால் கருத்துரைத்தார்.

மருத்துவர்களாக உள்ள இந்தியர்களில் பெரும்பாலோர், தம் பெற்றோரின் உதவியால் மருத்துவம் படித்தவர்களே தவிர அரசாங்க உதவியால் மருத்துவர் ஆனவர்கள் அல்லர்.

“அவர்களின் பெற்றோர் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டிப் பணத்தைச் சேமித்து சில நேரங்களில் வீட்டை விற்று படிக்க வைத்தார்கள். அதற்கும் இந்தியர்களின் பொருளாதார நிலைக்கும் தொடர்பில்லை”, என்றுரைத்த ஜஸ்பால் அதை வைத்து எந்த முடிவுக்கும் வந்து விடக்கூடாது என்றார்.

1 indian shahஷஹிடான் மனம்போன போக்கில் பேசி இருக்கிறார் என்று ஜஸ்பால் கூறினார்.

மக்கள்தொகையில்  இந்தியர்களின் விகிதாசாரத்துடன் ஒப்பிட்டால் இந்திய மருத்துவர், வழக்குரைஞர் எண்ணிக்கை அதிகம் என்று ஷஹிடான் கூறியுள்ளார். மக்கள்தொகையில் 7.3 விழுக்காடு உள்ள இந்தியர்கள் நாட்டின் சொத்துடைமையில் 1.5 விழுக்காட்டுக்குத்தானே சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள்.

“இதைத்தான் ஷஹிடான் இந்தியர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்கிறாரா?”, என்று ஜஸ்பால் காட்டமாகக் கேட்டார். .