தற்கொலை முயற்சி நாடற்றோரின் பரிதாப நிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறது

1 icமைகார்ட் பெற முடியாத 12-வயது சிறுமியின் தற்கொலை முயற்சி, அரசாங்கம்  இந்திய மலேசியரில் நாடற்றவர்களாக இருப்போரின் பிரச்னையைக் களையத் தவறிவிட்டது என்பதைக் காட்டுவதாக இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி கூறியுள்ளார்.

இப்பிரச்னைக்கு இண்ட்ராப் ஒரு “முழுமையான தீர்வை” பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் முன்வைத்தும்கூட இவ்வாறு நடந்துள்ளது எனப் பிரதமர்துறை துணை அமைச்சருமான வேதமூர்த்தி கூறினார்.

இப்படிப்பட்ட சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருக்க அரசாங்கம் அந்த உத்தேச தீர்வை உடனே  செயல்படுத்த வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.

அது, நாடற்றவர் விவகாரத்துக்குத் தீர்வு காண்பதில் அரசாங்கம் அக்கறை கொண்டிருப்பதைப் புலப்படுத்துவதாகவும் இருக்கும்.

1 ic vedaதேசியப் பதிவுத்துறை(என்ஆர்டி)யின்  “இரக்கமற்ற” போக்கின் காரணமாக சிறுமி தற்கொலை செய்துகொள்ள முயன்றது அரசாங்கம் “இனவாதமிக்கது” என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது என்று வேதமூர்த்தி கூறினார்.

தற்கொலைக்கு முயன்ற சிறுமி இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே, அவர் மரபணு சோதனைக்குச் செல்ல வேண்டியதில்லை என்றும் தேவையான ஆவணங்கள் இருந்தால் போதும் அவருக்கு மைகார்ட் வழங்கப்படும் என்று என்ஆர்டி பொதுஉறவு அதிகாரி ஜைனிசா முகம்மட் நூரை மேற்கோள்காட்டி ஃபிரி டூடே மலேசியா  கூறியது.

பெற்றோர் யார் என்பதை உணர்த்த பிறப்புச் சான்றிதழ் ஒன்றே போதும், மரபணு சோதனை எல்லாம் தேவை இல்லை என்றாரவர்.