மஇகா கூட்டம் நடத்தப்பட்ட விதம் சரியில்லை: ஒரு தலைவரின் முறைப்பாடு

micமஇகா தேர்தலுக்கு ஒரு நாள் எஞ்சியுள்ள வேளையில்,  கட்சியின்  செராஸ் தலைவர் ஒருவர் , தாம் சங்கப் பதிவகத்தில்(ஆர்ஓஎஸ்) கொடுத்த புகார்மீது கட்சித் தலைமை இன்னும் நடவடிக்கை எடுக்காதிருக்கிறது என்று முறையிட்டிருக்கிறார்.

கடந்த ஜூலையில் நடந்த கிளைத் தேர்தல்கள்  முறையாக நடத்தப்படவில்லை என்று புகார்தாரர் கூறுகிறார்.

அது பற்றி ஆர்ஓஎஸ்ஸிடம் புகார் கொடுத்து அதுவும் அவ்விவகாரத்தை விசாரிக்குமாறு மஇகாவுக்குக் கடிதம் எழுதியது.

ஆனால், கட்சித் தலைமை இதுவரை அதன்மீது  நடவடிக்கை எடுக்கவில்லை  என்று கூறிய செராஸ் மஇகா துணைத் தலைவர் கே.பழனிச்சாமி,  நாளை பிற்பகல் தேர்தல்  தொடங்குமுன்னர் அவ்விவகாரத்துக்குத் தீர்வு காணப்பட வேண்டும்  என்றார்.

ஜூலை 21-இல், செராஸின் 14 கிளைகள் பேராளர்களைத் தேர்ந்தெடுக்க நடத்திய கூட்டம் முறையாக நடத்தப்படவில்லை என பழனிச்சாமி ஆர்ஓஎஸ்ஸுக்குக் கொடுத்த புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.

“இவ்விவகாரத்துக்கு தேர்தலுக்கு முன்பே நடவடிக்கை எடுப்பது நல்லது. இல்லையேல் இது தேர்தலைப் பாதிக்கலாம்”, என்றவர் மலேசியாகினியிடம் கூறினார்.