இடைநிலைத் தமிழ்ப்பள்ளி: முகைதினுக்கு இக்கட்டான நிலை

 

Tamil 2ndary school - DPMஇன்று ஒரு தமிழ் இலக்கியப்புத்தகங்கள் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற துணைப் பிரதமர் முகைதின் யாசின் நாட்டில் ஒரு இடைநிலைத் தமிழ்ப்பள்ளி வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கொண்ட போது ஓர் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இந்த இலக்கிய நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர், மக்கள் சக்தி கட்சியின் தலைவர் ஆர். தனேந்திரன், அவரது தொடக்க உரையில் இக்கோரிக்கைய விடுத்தார்.

“கிட்டத்தட்ட 57 ஆண்டுகளாக நாம் சுதந்திரம் பெற்றவர்களாக இருந்து வருகிறோம். இங்கு பல சீன இடைநிலைப்பள்ளிகள் இருக்கின்றன. ஆனால், தமிழ் இடைநிலைப்பள்ளி ஒன்றுகூட கிடையாது.

“முகைதின் இந்திய சமூகத்தின்பால் அக்கறையுள்ளவர் என்பது எனக்குத் தெரியும். ஆகவே, இக்கோரிக்கைமீது அவர் தீவிர கவனம் செலுத்துவார் என்று நான் நம்புகிறேன்”, என்று தனேந்திரன் கூறினார்.

ஐயோ, இது சூடான விசயம்

இந்த கோரிக்கை ஒரு சூடான விசயமாகலாம் என்று முகைதின் அவரது உரையில் கூறினார்.

“இடைநிலைத் தமிழ்ப்பள்ளி பற்றிய கோரிக்கை மீது நான் கவனமாக இருக்க வேண்டியுள்ளது ஏனென்றால் தேசிய கல்விக் கொள்கை என்ற ஒன்று இருக்கிறது.

“இடைநிலைத் தமிழ்ப்பள்ளி தேவைதானா, விரும்பத்தக்கதா என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும்”, என்று முகைதின் கூறினார்.

சூரியனும் சந்திரனும் பிஎன்னும் இருக்கும் வரையில்…

இக்கோரிக்கை குறித்து எதுவும் முடிவாக கூறவில்லை என்றாலும், மத்திய அரசாங்கம் தமிழ்க் கல்வியின் வளர்ச்சிக்காக அளிக்கும் ஆதரவை, தமிழ் தொடக்கப்பள்ளிகளை அரசின் சுய முயற்சியில் கட்டுவது உட்பட, விவரித்தார்.

“சூரியனும் சந்திரனும் இந்த அரசாங்கம் பிஎன்னாகவும் இருக்கும் வரையில், சீன மற்றும் தமிழ்மொழிப்பள்ளிகள் இந்நாட்டில் இருக்கும் – நான் இதனைத் தேசிய கல்விப் பெருந்திட்டத்தில் உள்ளடக்கியுள்ளேன்.

“இப்பள்ளிகள் மூடப்படும் என்று கூறப்படுவதன் மீது கவனம் செலுத்த வேண்டாம். ஏனென்றால் அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டதில்லை. தேசிய கல்விப் பெருந்திட்டம் அவற்றின் (தாய்மொழிப்பள்ளிகளின்) நிலையை இந்நாட்டில் வலுப்படுத்தியுள்ளது.”

இவ்வாறான பள்ளிகள் மலேசிய பாரம்பரியத்தின் ஓர் அங்கமாகும். ஆகவே அவை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் முகைதின் கூறினார்.

“மலாய்க்காரர்கள், சீனர்கள் அல்லது இந்தியர்கள், ஒவ்வொருவருக்கும் அவரது தாய்மொழி உண்டு. அவை நாட்டின் சொத்தாகும்.

“அவை அழிந்து போவதற்கு அனுமதிக்கக்கூடாது. அவை தற்காக்கப்பட வேண்டும். அதேவேளை, பகசா மலேசியா தேசிய மொழியாகவும் ஆங்கிலம் இரண்டாவது மொழியாகவும் இருக்கும்”, என்று அவர் மேலும் கூறினார்.

பின்னர், அவர் பத்து தமிழ் இலக்கியப் புத்தகங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். அவற்றை தேசிய மொழியில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என்று அவர் ஆலோசனை கூறினார்.

“எனக்கு தமிழ் மொழி தெரியாவிட்டாலும், தமிழ் எழுத்தாளர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை என்னால் தெரிந்துகொள்ள முடியும்”, என்றும் அவர் கூறினார்.

சீன கல்விமான்கள் அமைப்பான டோங் ஸோங் தேசிய கல்விப் பெருந்திட்டத்தைக் கடுமையாகக் குறைகூறியுள்ளது. அத்திட்டம் தாய்மொழிப்பள்ளிகளை ஏற்றுகொள்ளவில்லை என்று அந்த அமைப்பு கூறுகிறது.