ஜாலான் பி.ரம்லி ஆலயம் தொடர்பில் மக்களவைக்குத் தப்பான தகவலைத் தந்திருக்கிறார் தெங்கு அட்னான்

1 sivaகூட்டரசு அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர், கோலாலும்பூர் ஸ்ரீமுனீஸ்வரர் காளியம்மன் ஆலயத்தை உடைக்க நீதிமன்ற ஆணை இருப்பதாக மக்களவையில் தப்பான தகவலைச் சொல்லி இருக்கிறார் என சுபாங் எம்பி ஆர்.சிவராசா கூறினார்.

நீதிமன்றம், ஆலயத்தை உடைக்க ஆணை பிறப்பிக்கவில்லை என்பதைத் தெளிவாகவே வலியுறுத்தியுள்ளது என்றாரவர்.

2012, ஜூலை  தீர்ப்பு, “ஆலயத்தின் சுவரை உடைப்பதற்கு ஆணை பிறப்பிக்கவில்லை,  அது இடத்தைக் காலிசெய்வதற்கான உத்தரவும் அல்ல” என்பதை நீதிபதி வி.டி. சிங்கம் 2013-இல் அளித்த தீர்ப்பில் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறார்.

“தெங்கு அட்னான் தப்பான தகவலை மக்களவையில் தெரிவித்திருக்கிறார். இதை அவர் தெரிந்துதான் செய்தாரா என்பதுதான் இப்போதைய கேள்வி.

“தெரிந்து செய்திருந்தால் அவரை உரிமைகள், சலுகைகள் குழுவுக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

“தெரியாமல் செய்திருந்தால் தப்பான தகவலை அவருக்குக் கொடுத்த அதிகாரி யார் என்பதையும் அவருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் அவர் விளக்க வேண்டும்”, என சிவராசா கூறினார்.