பினாங்கு முனிசிபல் மன்ற(எம்பிபிபி)த்தில் “குட்டி நெப்போலியன்கள்” இருந்துகொண்டு மன்றத்தின் சேவைகளைத் தாமதப்படுத்துகிறார்கள் என்று கூறப்படுவதை மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் செள கொன் இயோ மறுக்கவில்லை. ஆனால், அவ்விவகாரம் கட்டுக்குள் உள்ளதாக அவர் கூறினார்.
“அவர்கள் கட்டுபாட்டுக்குள் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்”, என மாநில டிஏபி தலைவருமான செள செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
எம்பிபிபி-இல் சீரமைப்பு தேவை என்றும் அதில் உள்ள“குட்டி நெப்போலியன்களால்” மன்றத்தின் சேவை தடைப்படுவதாகவும் ஜெலுத்தோங் எம்பி ஜெஃப் ஊய் கூறி இருந்ததற்கு செள இவ்வாறு எதிர்வினை ஆற்றினார்.
“மன்றத்தில் பிரச்னைகள் இருப்பதை மறுக்கவில்லை. நாங்கள் வாரந்தோறும் கூட்டம் நடத்துவதுண்டு. ஊய், இவ்விவகாரத்தை அதில் கொண்டு வந்திருக்கலாம். ஊடகங்களிடம் சென்றிருக்க வேண்டியதில்லை”, என்றாரவர்.