ரோஸ்மாவைச் சிறப்புப் பணி அமைச்சராக நியமனம் செய்யலாமே

kadirபிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் மீது பல குற்றம்குறைகள் சொல்லப்பட்டு வருகின்றன.

ரோஸ்மாவுக்கு எதிரான குறைகூறல்களை எதிர்க்கும் நோக்கில் அவர் இதுவரை வெளியில் தெரியாமல் செய்துள்ள பல நற் செயல்களை கடந்த சனிக்கிழமை அம்னோ பொதுப்பேரவையில் எடுத்துரைத்தார் நஜிப்.

எகிப்தில் உளவாளி என்ற ஐயத்தின்பேரில் கைதான மலேசிய மாணவரின் விடுதலைக்கு ரோஸ்மா உதவினார் என்றும் சவூதி அரச குடும்பத்துடன் உள்ள நெருக்கமான உறவைப் பயன்படுத்தி எகிப்திய எழிச்சியின்போது அங்கிருந்து தப்பியோடிய மலேசிய மாணவர்கள்  விசா இன்றி சவூதி அராபியாவுக்குள் நுழைய அனுமதி பெற்றுத் தந்தார் என்றும் நஜிப் கூறினார்.

kadir 1அது பற்றிக் கருத்துரைத்த மூத்த செய்தியாளர்   ஏ.காடிர் ஜாசின், அப்படியானால் ரோஸ்மாவை அமைச்சராக்கலாமே எனக் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.

“அனைத்துலக நெருக்கடி ஒன்றுக்குத் தீர்வுகாண்பதில் வெளியுறவு அமைச்சர் அனிபா அமான், ரோஸ்மாவைப் போல் சிறப்பாக செயல்படவில்லை எனத் தெரிகிறது.  அதனால் அவரைப் பதவி மாற்றுவது பற்றி நஜிப்  ஆலோசிக்கலாம்.

“அதேபோல் அனைத்துலக வர்த்தக, தொழில் அமைச்சர் முஸ்தபா முகம்மட், மகளிர், குடும்ப மேம்பாட்டு அமைச்சர் ரொஹானி அப்துல் கரிம், கல்வி அமைச்சர் முகைதின் யாசின் ஆகியோர் பற்றியும் ஆலோசிக்கலாம். ஏனென்றால், ரோஸ்மா அந்த அமைச்சர்கள் கவனிக்க வேண்டிய விவாகாரங்களையும் கவனித்திருக்கிறார்”, என்று காடிர் தம் வலைப்பதிவில் குறிப்பிட்டார்.

இப்படி அமைச்சர்களைப் பதவியிலிருந்து தூக்கினால் அரசாங்கத்துக்குப் பணமும் மிச்சமாகும் என்றாரவர்.