முன்னாள் ஐஜிபி: பேசக்கூடாததைப் பேசி மலாய்க்காரர் மனத்தைப் புண்படுத்துகிறார்கள்

ex igpமுன்பு பூமிபுத்ராக்களின் சிறப்புரிமை பற்றியோ, மலாய் ஆட்சியாளர் பற்றியோ இஸ்லாம் பற்றியோ மக்கள் கேள்வி எழுப்ப நினைத்துப் பார்த்ததுகூட இல்லை, இன்றோ அது சாதாரணமாகி விட்டது என முன்னாள் போலீஸ் படைத் தலைவர் முகம்மட் ஹனிப் ஒமார் கூறினார்.

இதற்கு “மாற்று ஊடகங்களும்”,  சமூகத் தலைவர்களும்,   இதனால் மலாய்க்காரர் மனம் புண்படுவது பற்றிக் கவலைப்படாத  “ஒரு சிறு கூட்டமும்”தான் காரணம் என்று ஹனிப்  குறிப்பிட்டார்.

“மக்களின் உணர்வுகள், குறிப்பாக மலாய்க்காரர்  மற்றும்  முஸ்லிம்களின் உணர்வுகள்  பாதிக்கப்படுவது  பற்றிய கவலையே கிடையாது. முஸ்லிம்களில்  சிலர் தங்களை இறைத்தூதர்கள் போலவும்  இறைவன் போலவும் நினைத்துக்கொண்டு பேசுகிறார்கள். இதைக் கண்டு  பணிஓய்வு பெற்ற என் நண்பர்களும் நானும் வருத்தப் படுகிறோம்.  எங்கே செல்கிறது நாடு என்று கவலை கொள்கிறோம்”.

ஞாயிற்றுக்கிழமை, அரசாங்கத்திலிருந்து பணிஓய்வு பெற்றவர்களுக்காக நடத்தப்பட்ட தேநீர் விருந்தில் ஹனிப் இவ்வாறு பேசினார்.  அவரது உரை இன்று ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.