சிங்கப்பூரில், ஞாயிற்றுக்கிழமை கலவரம் நடந்த லிட்டல் இந்தியா பகுதியில் கண்காணிப்பு கேமிராக்கள் பல இடங்களிலும் பொருத்தப்பட்டு பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டிருக்கிறது.
கண்காணிப்பு கேமிராக்கள் (சிசிடிவி) பொருத்தப்பட்டதை அப்பகுதிவாழ் மக்களும் வர்த்தக நிறுவனங்களும் பெரிதும் வரவேற்கின்றனர். வார இறுதிகளில் அப்பகுதியில் அமைதியையும் பாதுகாப்பையும் நிலைநிறுத்த கண்காணிப்பு கேமிராக்கள் தேவை என்பதை அவர்கள் நெடுங்காலமாகவே சொல்லி வந்திருக்கிறார்கள்.
அங்குள்ள கடைக்காரர்களுக்கு வார இறுதியில் மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதைத் தெரிவிக்கும் அறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.
இதனிடையே, போலீஸ் அறிக்கை ஒன்று கலகம் தொடர்பில் மேலும் ஐந்து இந்திய நாட்டவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தது. அவர்கள் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்.