சாலைக்கட்டண உயர்வுக்கு நெடுஞ்சாலை பராமரிப்பாளர்மீது பழி போடாதீர்

rafizi01அடுத்த ஆண்டு சாலைக்கட்டணம் உயர்த்தப்படுவதைப் பொதுமக்கள் ஏற்கத்தான் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமைச்சரை பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி சாடினார்.

பிரதமர்துறை அமைச்சர் அப்துல் வாஹிட் ஒமார்,  அரசாங்கம் நெடுஞ்சாலை பராமரிப்பாளர்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்குக் கட்டுப்பட வேண்டியுள்ளது என்று கூறி இருந்தார்..

2011-இலேயே சாலைக் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். உயர்த்தப்படாததால் அவர்கள் இழப்பை எதிர்நோக்கினார்கள் எனவும் அப்துல் வாஹிட் கூறி இருந்தார்.

“நம்மை மடையர்கள் என நினைத்துக்கொண்டு சாலைப் பராமரிப்பாளர்கள்மீது பழியைப் போடுகிறார்…….எல்லாமே புத்ரா ஜெயா பாக்கெட்டுக்குத்தான் போகிறது. இடது பாக்கெட்டிலிருந்து வலது பாக்கெட்டுக்குப் போகிறது அவ்வளவுதான்”, என ரபிஸி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அரசாங்கத்துக்குச் சொந்தமான மூன்று நிறுவனங்கள்தான் நெடுஞ்சாலை பராமரிப்புக்கு 80 விழுக்காடு பொறுப்பு வகிக்கின்றன என்றவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, அரசாங்கம் சொன்னால் புரொஜெக்ட் லெபோராயா உத்தாரா செலாத்தான் (பிளஸ்), புரோலிந்தாஸ், கமூடா ஆகியவை கண்டிப்பாகக் கேட்கும் என ரபிஸி குறிப்பிட்டார்.