கனி பட்டேய்ல்: ரபிஸி என் கணக்குகளைத் தாராளமாக ஆராயலாம்

1 agசட்டத்துறை தலைவர் அப்துல் கனி பட்டேய்ல், பாண்டான் எம்பி ரபிஸி ரம்லி விரும்பினால் தம் வங்கிக் கணக்குகளைத் தாராளமாக நுணுகி ஆராயலாம் என்று கூறினார்.

முன்னாள் கோலாலும்பூர் சிஐடி இயக்குனர் மாட் ஸைன் இப்ராகிம் அண்மையில் செய்த சத்திய பிரமாணத்தில் அப்துல் கனியின் தவறான நடத்தை பற்றிக் கூறியிருப்பது உண்மையா என்பதைக் கண்டறிய ஹாங்காங் அதிகாரிகளின் ஒத்துழைப்பை நாடப்போவதாக ரபிஸி கூறியதாக த மலேசிய இன்சைடரில் வெளிவந்த செய்திக்கு எதிர்வினையாக அப்துல் கனி இவ்வாறு கூறினார். 

பூலாவ் பத்து பூத்தே தீவு மீது அனைத்துலக நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் தமக்கு மில்லியன் கணக்கான டாலர் கையூட்டுக் கொடுக்கப்பட்டதாகக் கூறும் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார்.

“ரபிஸி என் வங்கிக் கணக்குகளை ஆராய அதிகாரமளிக்கும் கடிதத்தை வழங்கத் தயார்.

“எந்த நேரத்தில் வேண்டுமானாலும் என் அலுவலகம் வந்து அவர் கடிதத்தைப் பெற்றுக்கொள்ளலாம்”, என்று அப்துல் கனி கூறினார்.