பிகேஆர்: ஆத்திரப்பட வைக்கும் விதத்தில் பேசுகிறார் வாஹிட்

azminடோல் கட்டண உயர்வை ஏற்க முடியாதவர்கள் மாற்றுச்சாலைகளில் செல்லலாம் என்று பிரதமர்துறை அமைச்சர் அப்துல் வாஹிட் ஒமார் கூறியது “ஆத்திரப்படவைக்கிறது” அது “பொறுப்பற்ற பேச்சு” என பிகேஆர் வருணித்துள்ளது.

அரசாங்கம் “சாலைப் பராமரிப்பு ஒப்பந்தத்தின் பின்னே ஒளிந்துகொள்ளாமல்” டோல் கட்டண உயர்வால் மலேசியர்களுக்கு ஏற்படக்கூடிய நிதிச் சுமையை எண்ணிப் பார்க்க வேண்டும் என பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி (வலம்) குறிப்பிட்டார்.

“மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அமைச்சருக்கு நினைவுறுத்துகிறோம், ஆணவப் பேச்சால் மக்களை ஆத்திரப்பட வைக்க வேண்டாம்…..

“இந்த உத்தேச உயர்வும் திட்டமிடப்படும் மற்ற விலை உயர்வுகளும் மக்களின் நல்வாழ்வுக்கு மிரட்டலாக அமைகின்றன”, என்றவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

“சராசரி  மனிதர் வாழ்க்கைச் செலவினத்தைச் சரிக்கட்ட முடியாமல் தத்தளிக்கும்போது பங்குச் சந்தையைப் பாருங்கள் எவ்வளவு பிரமாதமாக இருக்கிறது, நம் வளர்ச்சி விகிதங்களைப் பாருங்கள் எவ்வளவு கவர்ச்சியாக இருக்கின்றன என்று அரசாங்கம் சொல்லிக்கொண்டிருப்பதில் பயனில்லை”, என அஸ்மின் மேலும் கூறினார்.