இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின், போக்குவரத்துக் கட்டண உயர்வு, நெடுஞ்சாலைக் கட்டண உயர்வு ஆகியவற்றைத் தடுக்க முடியாவிட்டால் பதவி விலக வேண்டும் என்று எதிரணி தலைவர் ஒருவர் குறிப்பிட்டார்.
பிகேஆரின் ஸ்ரீசித்தியா சட்டமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அஹ்மட் (இடம்), இதற்குமுன்னர்கூட கைரி தலைமையில் செயல்படும் அம்னோ இளைஞர் பகுதி விலை உயர்வுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது உண்டு ஆனால், விலை உயர்வுகளைத் தடுத்து நிறுத்தியது இல்லை என்றார்.
“கைரியும் அம்னோ இளைஞர்களும் நாடகமாடுவதை நிறுத்த வேண்டும். அவர்கள் தேசிய உயர்கல்விக் கடன் (பிடிபிடிஎன்) வாங்கியவர்கள் கறுப்புப் பட்டியலிடப்படுவதைக் குறைகூறினார்கள், தெனாகா நேசனலின் மின்கட்டண உயர்வை எதிர்த்தார்கள். ஆனால், எதையும் நிறுத்த முடியவில்லை”, என நிக் அஸ்மி ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
விலை உயர்வு விவகாரத்தை அமைச்சரவையில் எழுப்பப்போவதாக கைரி கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் சாலைக்கட்டண உயர்வு உள்பட விலை உயர்வுகளைத் தடுத்து நிறுத்த முடியாவிட்டால் கைரி அமைச்சர் பதவியைத் துறக்கத் தயாரா என்று நிக் நஸ்மி சவால் விடுத்தார்,