தமிழர் என்ஜிஓ-வுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது ஏன்? போலீஸ் விளக்க வேண்டும்

ramasamyகெடா , கூலிமில்,  காலஞ்சென்ற தமிழீழ விடுதலை புலிகள் தலைவர்  வி.பிரபாகரனின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட தமிழ் என்ஜிஓ-ஒன்றின் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது ஏன் என்று போலீஸ் விளக்க வேண்டும்.

இவ்வாறு கேட்டுக்கொண்ட பினாங்கு துணை முதலமைச்சர் II பி.இராமசாமி, அதனைப் “பயங்கரவாதத்தின் புகழ்பாடும்” நிகழ்வு என வருணித்த போலீஸ் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் காலிட் அபு பக்காரையும் சாடினார்.

அந்நிகழ்வை “பயங்கரவாதத்தின்மீது நம்பிக்கை வைக்குமாறு மக்களைத் தூண்டும் ஒரு செயல், ஒரு முயற்சி” எனப் போலீஸ் கருதுவதாக காலிட் கூறினார் என்று பெர்னாமா செய்தி ஒன்று  குறிப்பிட்டிருந்தது.

“அவர் என்ன செய்கிறோம் என்பதைத் தெரிந்துதான் செய்கிறாரா? இவ்விவகாரத்தில் அவர் எல்லைமீறிச் சென்று விட்டதாக தெரிகிறது. இந்திய சமூகத்துக்குத் தொல்லை தருவதை அவரது படையினர் நிறுத்த வேண்டும்”, என இராமசாமி மலேசியாகினியிடம் கூறினார்.

அந்நிகழ்வில் கலந்துகொண்டதற்காக தமிழர் முற்போக்குக் குழு என்னும் என்ஜிஓ-வைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.

அதில்  கலந்துகொண்ட மேலும் அறுவரிடம் போலீசிடம் சரணடையுமாறு கூறப்பட்டிருக்கிறது.

மலேசியாவில் அப்படிப்பட்ட நிகழ்வுகள் சகஜமானவை என்றும் இதுவரை பிரச்னை இன்றி அவை நடந்து வந்துள்ளன என்றும் இராமசாமி கூறினார்.