நீதி வேண்டும்: அமினுல்ரஷிட்டின் தாயார் பிரதமரிடம் கோரிக்கை

1 aminulமூன்றாண்டுகளுக்குமுன் காரில் விரட்டிச் செல்லப்பட்டு போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட 15வயது சிறுவனின் குடும்பம் நீதி வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தமக்கு எழுதிய கடிதமொன்றைக் காண்பித்த அமினுல்ரஷிட்டின்  தாயார் நோர்ஷியா முகம்மட், அதில் தம் மகனின் சாவுக்குப் பொறுப்பானவர்களைக் கண்டுபிடிப்பதில் “நீதியும் வெளிப்படைத்தன்மையும்” நிலைநாட்டப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டிருந்தது என்றும் ஆனால் இரண்டுமே நிறைவேற்றப்படவில்லை என்றும் கூறினார்.

“சுட்டுத்தள்ளுவதற்கு என் மகன் என்ன போக்கிடமற்று தெருவில் சுற்றித்திரியும் பூனையா?”, என்றவர் வினவினார்.

அமினுல்ரஷிட்டின்  சாவுக்கு அரசாங்கம் யாரையுமே பொறுப்பாக்கவில்லை. கொலைக்குற்றம் சாட்டப்பட்ட  கார்ப்பரல் ஜெனைன் சுபி-யும் விடுவிக்கப்பட்டார் என நோர்ஷியா கூறினார்.

வழக்குரைஞர்கள் என்.சுரேந்திரன், லதீபா கோயாவுடன் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தம் குடும்பத்தார் நீதி கேட்டுப் பொது இயக்கம் ஒன்றைத் தொடங்கப்போவதாகக் கூறினார்.