இஸ்மா: விலை உயர்வுக்கு அம்னோவே காரணம்

1-ismaவிலை உயர்வுக்குக் காரணம் அம்னோதான் என்று மக்கள் குறைகூறுவதில் என்ன தப்பு என ஈக்காதான் முஸ்லிமின் மலேசியா (இஸ்மா) என்னும் என்ஜிஓ வினவியுள்ளது.

விலை உயர்வுக்கு அம்னோ மீது குறைகாணக் கூடாது என்று கூறிய பெல்டா தலைவர் இசா சமட்டைச் சாடிய இஸ்மா துணைத் தலைவர் அமினுடின் யாஹ்யா, அம்னோ தலைவர்கள் சமுதாயம் எதிர்நோக்கும் உண்மை நிலவரங்களைப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதற்கு அவரது கூற்று நல்ல சான்று என உரைத்தார்.

“இசா எதற்காக விலை உயர்வுக்கு மக்கள் அம்னோவைக் குறைகூறக்கூடாது என்கிறார்? அவர்கள் (அம்னோ)தானே கொள்கைகளைத் தீர்மானிக்கிறார்கள், செயல்படுத்துகிறார்கள். எனவே, அம்னோ அதற்குப் பொறுபேற்காமல் தப்பிக்க முடியாது”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

விலைகள் உயர்கின்றன. அதே வேளை  நாட்டின் வருமானமும்  அதிகரித்து வந்துள்ளது.  அந்தப் பணமெல்லாம் எங்கே போகிறது.  ஒவ்வோராண்டும் தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை  பெரும்பணம் விரமாவதைக் கவனப்படுத்துகிறது.  ஆனால்,  அவற்றுக்கெல்லாம் விளக்கம் அளிக்கப்படுவதே இல்லை என அமினுடின் மேலும் கூறினார்.

வேண்டியவர்களின்  நிறுவனங்கள்  ஆதாயம் பெறுவதை உறுதிப்படுத்த மக்கள்மீது சுமையை ஏற்றக் கூடாது. அம்னோ- பிஎன் தலைவர்கள் மக்கள் நலன் காப்பதில் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும் என்றவர்  கேட்டுக்கொண்டார்.