மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), சரவாக் முதலமைச்சர் அப்துல் தயிப் மஹமூட் மீதான புலன் விசாரணையை நிறுத்தவில்லை, அது “தொடர்கிறது”.
இவ்வாறு தெரிவித்த அவ்வாணையத்தின் நடவடிக்கை பரிசீலனை வாரிய(பிபிஓ)த் தலைவர் ஹடினான் அப்துல் ஜலில், அந்த விசாரணை “சிக்கல்மிக்க” ஒன்று என்றார். அதனால்தான் அது இத்தனை நாள் எடுத்துக்கொண்டிருக்கிறது.
ஊழல் கண்காணிப்பு அமைப்பான குளோபல் விட்னஸ், வெட்டுமரத் தொழில் உரிமங்களின்வழி தயிப்பின் உறவினர்கள் சட்டவிரோதமாக ஆதாயம் காண முயல்கிறார்கள் என்று குற்றம் சாட்டியதை அடுத்து எம்ஏசிசி இவ்வாண்டு மார்ச் மாதம் விசாரணையைத் தொடங்கியது.
“அது விசாரணை செய்யும் வழக்குகள் நீதிமன்றம் கொண்டு செல்லப்படவில்லை என்றால் ஆணையத்தைக் குறை சொல்வது வழக்கமாகி விட்டது,” என ஹடினான் கூறினார்.
“எம்ஏசிசி முடிந்தவரை நன்றாகத்தான் விசாரிக்கிறது. ஆனால், ஊழல் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாதுபோனால் அதற்காக ஆணையத்தைக் குறைசொல்வது நியாயமல்ல”, என்றாரவர்.