கம்போங் ரயில்வேயை உடைக்கும் வேலை தொடங்கியது ஆனாலும் 13 குடும்பங்கள் அங்கேயே உள்ளன

1 kg railwayகம்போங் ரயில்வே-இல் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளும் செந்தூல் ராயா சென்.பெர்ஹாட், இன்று அங்குள்ள வீடுகளை இடித்துத்தள்ளும் நடவடிக்கையைத் தொடங்கியது. ஆனால், மற்ற குடியிருப்பாளர்கள் அந்த இடத்தைக் காலி செய்த விட்டபின்னரும் 13 குடும்பங்கள் மட்டும் இன்னும் அங்கேயே தங்கி இருக்கின்றன.

இவர்களுக்குப் புதிய தற்காலிக வீடுகள் வழங்கப்படுவதைத் தெரிவிக்கும் கோலாலும்பூர் மாநகராட்சி மன்ற(டிபிகேஎல்) கடிதங்கள் திங்கள்கிழமைதான் கிடைத்தன என்று பிகேஆர் பத்து தொகுதி தொடர்புப் பிரிவு மேலாளர் விக்னேஷ் நாயர் கூறினார்.

எனவே, அங்கிருந்து வெளியேற மேலும் சில நாள்  அவகாசத்தை மனிதாபிமான முறையில் வழங்கும்படி கேட்டிருப்பதாக விக்னேஷ் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

“கடிதம்  கிடைக்கப்பெற்ற 13 குடியிருப்பாளர்களும் வெளியேறத் தயார். ஆனால், அது மடத்தனமான கடிதம். டிசம்பர் 20 என்று தேதியிடப்பட்ட அக்கடிதத்தில் டிசம்பர் 15-க்குள் வெளியேற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது”, என்றாரவர்.

13 குடும்பங்களும் வீட்டுடைப்பு வேலைகளை ஞாயிற்றுக்கிழமைவரை தள்ளிவைக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கின்றன.