அலவன்ஸ் குறைப்பு விரயங்களை எவ்வகையிலும் தடுக்காது

najibபிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சிக்கன நடவடிக்கையாக அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் ஆகியோரின் கேளிக்கை அலவனஸில் 10 விழுக்காடு குறைக்கப்படும் என அறிவித்திருப்பது அரசாங்கத்தில் விரயங்களைக் குறைக்க “எவ்வகையிலும் உதவாது” என்கிறார் பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி.

“கேளிக்கை அலவன்ஸ் குறைப்பு, அண்மைய விலை உயர்வுகளால் மக்கள் ஆத்திரம் அடைந்திருப்பதை அரசாங்கம்  அறிந்துள்ளதற்கான அறிகுறி என்றாலும் அது விரயங்களைத் தடுக்க உதவாது”, என ரபிஸி இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

நஜிப்பின் மாதாந்திர  கேளிக்கை அலவன்ஸ் ரிம16,979. அதில் ரிம1,698 தான் குறைக்கப்படும் என்பதை ரபிஸி சுட்டிக்காட்டினார்.  அதே வேளையில் பிரதமர்துறைக்கென ரிம6.8 பில்லியன் கொண்ட மர்ம நிதி உள்ளது. இதைத்தான் டிஏபி “கையூட்டு நிதி போன்றது” எனக் குறிப்பிடுகிறது.

“இந்த ஒதுக்கீட்டில் ஒரு சென்கூட குறைக்கப்படவில்லை. இதிலிருந்துதான்  செலவுகள் என்ற பெயரில் மக்களின் பணம் விரயமாக்கப்படுகிறது”, என்றாரவர்.

செலவுகளைக் குறைக்க நஜிப் நேற்று அறிவித்த நடவடிக்கைகள் பழியை அரசாங்கப் பணியாளர்கள்மீது போடுவதுபோல் இருக்கிறது எனவும் ரபிஸி கூறினார்.

“நாட்டின் நிதித் தொல்லைகளுக்குத் தலையாய காரணம் தலைமைத்துவம்தான். ஊழலை எதிர்ப்பதில் அதற்கு உண்மையில் அக்கறை இல்லை”, என்றவர் குறிப்பிட்டார்.

நஜிப் வாழ்க்கைச் செலவினத்தைக் குறைப்பதில் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால் உத்தேச டோல் கட்டணங்களை நிறுத்த வேண்டும், கார்களுக்கான கலால் வரியைக் குறைந்தது  30 விழுக்காடாவது  குறைக்க  வேண்டும் என்று  ரபிஸி கேட்டுக்கொண்டார்.