மலேசியர்கள் மனிதர்கள் என்ற உணர்வால் எழுவார்கள்!

ny 2014கா. ஆறுமுகம். மலேசியர்களின் சிறந்த ஆண்டாக 2013 திகழ்ந்தது. ஒட்டு மொத்த நாட்டு நடப்பில் ஒவ்வொருவரும் உணர்வுடன் செயல்பட்ட அனுபவம் மகிழ்வைக் கொடுக்கிறது.

அரசியலைப் பேசாத ஆளே இல்லை எனலாம். பொதுத்  தேர்தல் முதல் கட்சித் தேர்தல் வரை மூலை முடுக்கெல்லாம் முனகலும் கூச்சலுமாக ஆதரித்தும் எதிர்த்தும் மக்கள் தங்களின் நிலைப்பாட்டைப் பதிவு செய்தனர்.

அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் என்பார்கள். காரணம் குழந்தைக்கு அழுகை ஓர் அரசியல் ஆயுதம்.

2013-இல் தான் மலேசியர்கள் முதன் முதலாக தங்களது பெரும்பான்மையான வாக்குகளை ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களித்துத்  தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

அப்படி செய்தும் அடுத்த ஆண்டு மக்களுக்கு ஒரு சுமை மிகுந்த ஆண்டாகவே இருக்க போவதற்கான அறிகுறிகள் உள்ளன.

ஜிஎஸ்டி (GST) என்ற பொருள்சேவை  வரி அமுலாக்கம், டோல் கட்டணம் ஏற்றம், சாதாரண மக்கள் கனவிலும் வீடு வாங்க இயலாத வகையில் ஏற்றம் கண்டுள்ள வீடுகளின் விலையேற்றம். காய்கறிகள், மீன், ஊடான், நண்டு முதல் பாடபுத்தகங்கள், உணவு வகை, என்றவையெல்லாம் ஒரு புறம் விலை உயர மக்களின் வருமானம் தகுந்த வகையில் உயர்வு காண தவறிவிட்டது.

மக்கள் கடனை வாங்கிதான் உயிர்வாழ முடியும் என்ற நிலைதான் உள்ளது.

நாட்டின் கடன் கூடுகிறது. மக்களின் கடனும் கூடுகிறது. ஆனால், நமது நாட்டின் நிலைத்தன்மை நன்றாக உள்ளது என்கிறது அரசாங்கம். மக்கள்தான் சிக்கனமாக வாழ வேண்டும் என்று கூறுகிறது. இல்லையென்றால் நாடு திவாலாகி விடுமாம். இது கேழ்வரகில் நெய் வடியும் என்பது போல் இருக்கிறது அல்லவா?

1gstநாட்டில் வளம் இல்லையா, பணம் இல்லையா? அவை எல்லாம் என்ன ஆனது? என்று கேட்டால், அதற்கான அரசாங்கத்தின் பதில், ‘யாற்றில் செத்த எருமை ஈர்த்தல் ஊர்க் குயவர்க் கடன்’ என்ற பழமொழி வகையில் வரும்.

ஆற்றில் ஓர் எருமை செத்துக் கிடந்தது. அதை எடுத்துப் போடுவது யார் கடமை என்பது பற்றி ஊரில் வாக்குவாதம் நிகழ்ந்தது. ஒருவர் தீர்ப்புச் சொன்னாராம். ஆற்றில் திடீரென வந்த மழை வெள்ளத்தால் எருமை அடித்துவரப்பட்டது; அதற்கு மழை காரணம்; மழைக்குக் காரணம் மேகப்புகை;   புகைக்குக் காரணம் ஊர்க் குயவர்கள் சட்டிபானைகளை நெருப்பில் வேகவைத்த செயல். ஆகவே எருமையை எடுக்க வேண்டியது ஊர்க்குயவர்க் கடன் என்று,

நமது அரசாங்கத்தின் சாக்கு போக்குகள் இவ்வகையில் உள்ளதை நம்மால் உணர முடியும் என்பது அவர்களுக்குத்  தெரியவில்லை.

2014 -ஆம் ஆண்டு மலேசியர்களின் உண்மையான விடுதலைக்கு வித்திடும் என்று நம்பலாம். போராட்டங்கள் அதிகம் இருக்கும் என கணிக்கப்படுகிறது.

உள்துறை அமைச்சர் அதற்கு ஆயத்தமாகி வருகிறார். போராட்டங்களை ஒடுக்க தயார் என்றும் போராடுவது சட்டத்திற்கு புறம்பானது எனவே சட்டம் பாயும் என்கிறார்.

மக்களை அடக்கி ஒடுக்கி வைத்து எப்படி அரசாங்கத்தை நடத்துவது. அப்படி செய்வதன் வழி அது யாரைக் காப்பாற்றுகிறது.

மாடுகள் வேலியை தாண்டுமா?

சுற்றிலும் வேலியிடப்பட்டு உள்ளே அடைக்கப்பட்டிருக்கும் மாடுகளாகவே மனிதர்களைக் காண்கின்றேன் என்கிறார் லியோ டோல்ஸ்டாய்.

வேலிக்குள்ளே மாடுகள் சாப்பிடுவதற்குப் போதுமான புற்கள் இருக்காது.  ஆனால், வேலிக்கு வெளியே மாடுகள் சாப்பிடுவதற்கு ஏராளமான பச்சை பசேலென்ற மேய்ச்சல் நிலங்கள் இருக்கும்.

உயிர் வாழும் போராட்டத்தில் வேலிக்கு உள்ளே இருக்கும் அந்த கொஞ்சம் புற்களுக்காக மாடுகள் ஒன்றோடொன்று அடித்துக் கொண்டு மிதிபட்டு நசுங்கும்.

அந்த மாடுகளின் உரிமையாளர் தனது மாடுகளின்  பரிதாபமான நிலை குறித்து மனம் இரங்குவார்.

அவற்றின் நிலையை மாற்றுவதற்கான எல்லா சிறந்த வழிகளையும் யோசிப்பார்.

அவரின் நண்பர்களை அழைத்து அவர்களின் உதவியோடு வெளியே செழித்து வளர்ந்திருக்கும் புற்களை வெட்டி வேலிகளுக்கு உள்ளே இருக்கும் மாடுகளுக்கு உணவளிப்பார்.

அதை அவர்கள் சேவை என்பார்கள்.

கன்றுகள் முறையான வளர்ச்சியின்றி இறக்க நேரிடும்போது ஒவ்வொரு நாள் காலையிலும் அவற்றிற்குக் காலை உணவாக பால் வழங்குவார்.

இரவு தாங்க முடியாத குளிரால் மாடுகள் இறக்க நேரிடும் போதும் வடிகால் வசதிகளுடன் கூடிய காற்றோட்டமுள்ள கொட்டகைகளை அவற்றுக்காக கட்டுவார்.

உணவுக்கான போராட்டத்தில் அவை சண்டையிட்டு கடுமையான காயமடையாமல் இருப்பதற்கு அவற்றின் கொம்புகளில் தக்கைகள் பதிப்பார்.

இப்படியாக, தனது கால்நடைகளின் நலனை மேம்படுத்துவதற்காக தன்னால் செய்ய முடிந்த அனைத்தையும் அவர் செய்வார்.

ஆனால், எல்லாருக்கும் தெரிந்த மிக வெளிப்படையான ஒன்றை அதாவது  அந்த வேலிகளைத் தகர்த்து விட்டு கால்நடைகளை வெளியே சுதந்திரமாக விடுவதைக் குறித்துக் கேட்டால் அவரது பதில் இதுவாக இருக்கும்.

“நான் கால்நடைகளை வெளியே விட்டால், அவற்றிடமிருந்து பால் கறக்க முடியாது”

மக்களுக்கு சனநாயகத்தையும் உரிமையையும் கொடுத்தால் எப்படி நாட்டின் வளத்தை சுரண்டுவது!

2014 ஆம் ஆண்டில் மலேசியர்கள் மனிதர்கள் என்ற உணர்வால் எழுவார்கள் என்ற நம்பிக்கையுடன் புத்தாண்டை வரவேற்போம்.

அனைவருக்கும் செம்பருத்தியின் சார்பில் புத்தாண்டு வாழ்த்துகள்.