மக்களுக்குத் தேவை சிக்கனம், பினாங்கு சிஎம்முக்குத் தேவை புத்தம் புது பென்ஸா?

benzமுதலமைச்சர் லிம் குவான் எங்  சிக்கனத்துக்குப் பேர் பெற்றவர்.  விமானப் பயணம் செய்வதாக இருந்தால்கூட ஏர்ஏசியா  பட்ஜெட் விமானத்தில்தான்  பறப்பார். அப்படிப்பட்டவர் இனி, ரிம657,218 மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் S300L-இல்   பவனி வருவார்.

அரசாங்கச் செலவுகளைக் குறைக்க புத்ரா ஜெயா 11 நடவடிக்கைகளை அறிவித்துள்ள வேளையில்,  பினாங்கு அரசு முதலமைச்சருக்கு எதற்காக புத்தம் புது ஆடம்பரக் கார் வாங்கியது  என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

இதற்கு பினாங்கின் நிதி அதிகாரி மொக்தார் முகம்மட் ஜாயிட் ஒரு அறிக்கையில் விளக்கமளித்துள்ளார்.

“மெர்சிடிஸ் விநியோகிப்பாளர், வரி விலக்களிப்பட்டு அத்துடன் ரிம100,000 சிறப்புக்கழிவும் வழங்கி ரிம298,263.75-க்கு S300L-லை விற்பதற்கு முன்வந்தார்.

“அது நல்ல விலை எனக் கருதப்பட்டது. மெர்சிடிஸ் வாகனங்கள் நீண்ட காலம் உழைக்கக்கூடியவை. முன்னாள் முதலமைச்சர் கோ சூ கூனும் மெரிசிடிஸ் பென்ஸ் S300L-தான் பயன்படுத்தினார்”, என மொக்தார் கூறினார்.

1995-இல் அது ரிம271,331.22-க்கு வாங்கப்பட்டது. 1 ஆண்டுகளுக்கு முந்திய விலைக்கும் இப்போதைய புதிய விலைக்கும் அதிக வேறுபாடு இல்லை என்றாரவர்.

“பினாங்கு முதலமைச்சருக்குள்ள சலுகைகளின்படி  மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்400, மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்300 என இரண்டு வாகனங்களை வைத்துக்கொள்ளலாம்.

“ஆனால் முதலமைச்சர் ஒரே ஒரு காரைத்தான் வைத்துள்ளார்”, என மொக்தார் மேலும் கூறினார்.