மலரும் புத்தாண்டு சவால் மிக்கது; மலேசிய இந்திய சமுதாயம் விழிப்படைய வேண்டும்

மலரும் ஆங்கிலப் புத்தாண்டு மலேசியவாழ் இந்திய சமுதாயத்தினருக்கு சவால் மிக்கதாக இருக்கும். விண்ணை முட்டும் விலைவாசி உயர்வை எதிர்கொள்ள மலேசிய இந்தியர்களுக்கு புத்தாக்க சிந்தனை   வேண்டும் என்று மலேசிய இந்தியர் முன்னேற்ற மன்றத்தின் சார்பில் கேட்டுக் கொள்வதாக அதன் தேசியச் செயலாளர் ச.பாரதிதாசன் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்
கணவன், மனைவி இருவரும் வேலை செய்தபோதும் சமாளிக்க முடியாத நிலையில் உபரி வருமானத்திற்கு பகுதி நேர வேலையையும் செய்தாக வேண்டிய கட்டாயச் சூழல் எழுந்துள்ளது. குறிப்பாக, பல இன மக்கள் வாழும் மலேசிய கூட்டு சமுதாயத்தில் நம் சமுதாயம் மதிக்கப்பட வேண்டுமெனில் கல்வியிலும் பொருளாதாரத்திலும் நாம் உயர வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
மற்ற இனத்தவரை நாம் புறந்தள்ள வேண்டிய அவசியம் இல்லை. நல்லவர்கள் எல்லா இடத்திலும் உண்டு. எனவே நாம் ஏனைய இனத்தவருடன் இணங்கி, வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்தி  வாழ்க்கையில் உயர்வதற்கான ஆக்கப்பூர்வ சிந்தைனையை கைக்கொள்ள வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் உழைக்கத் துணிந்து விட்டால் அடுத்தவரைக் கெடுக்கின்ற மனம் தோன்றாது. வன்முறையும் சமுதாயத்தில் இடம்பெறாது.
மொத்தத்தில் சவால் மிக்க எதிர்காலத்தை எதிர்கொள்ள நம் அனைவருக்கும் புத்தாக்க சிந்தனை வேண்டும் என்று பாரதிதாசன் அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்