எஸ்ஏஎம்எம், அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தொடுக்கும்

rallyவிலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் டிசம்பர் 31 பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்த அமைப்புகளில் ஒன்று, அப் பேரணியை ஆட்சியைக் கவிழ்க்கும் திட்டம் என்று கூறிய அரசாங்கத்தின்மீது  வழக்குத் தொடுக்க எண்ணுகிறது.

சொலிடேரிடி அனாக் மூடா மலேசியா (எஸ்ஏஎம்எம்) என்னும் அமைப்பு,  சுமார் 10,000பேர் கலந்துகொண்ட  அப்பேரணி  அமைதியாகவே நடந்தேறியது;  அரசாங்கமும் “கவிழ்க்கப்படவில்லையே” என்று கூறியது.

“எஸ்ஏஎம்எம்-மும் வேறு சில என்ஜிஓ-களும் ‘அரசாங்கத்தைக் கவிழ்க்க’ பேரணிக்கு ஏற்பாடு செய்வதாக  போலீஸ் குற்றம் சாட்டியது. அது பொறுப்பற்ற, அரைவேக்காட்டுதனமான குற்றச்சாட்டு என நிரூபிக்கப்பட்டிருக்கிறது”, என்று எஸ்ஏஎம்எம் பரப்புரை  இயக்குனர்  எடி நூர் ரிட்வான் ஓர் அறிக்கையில் கூறினார்.

“எஸ்ஏஎம்எம்-முக்கு  ஏற்படுத்தப்பட்டிருக்குக் களங்கத்தைப் போக்க விரைவில் சட்ட நடவடிக்கை எடுப்போம்”, என்றாரவர்.