‘கொல்ல’த் தூண்டும் முப்திக்குக் கடும் கண்டனம்

marinaபுத்தாண்டுக்கு முதல்நாள் இரவில் டாட்டாரான் மெர்டேகாவில் ஆர்ப்பாட்டம் செய்தவர்களைக் கொல்ல வேண்டும் என்று கூறிய பேராக் முப்தி ஹருஸ்ஸானி ஜக்கரியாவுக்கு எதிராக டிவிட்டரில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அவரைப் ‘போப்பாண்டவர்’ ஹருஸ்ஸானி என்று கிண்டலாகக் குறிப்பிட்டிருந்தார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் புதல்வி மரினா மகாதிர் (இடம்).

“விலை உயர்வு என்று முறையிடுவோரைக் கொல்லலாம் என்கிறாரா ‘போப்’ ஹருஸ்ஸானி. அவருடைய மனைவிமார் பொருள் வாங்கிய பின் புகார் செய்வதில்லையோ?”, என்றவர் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் தேச துரோகிகள் என்றும் அவர்களைக் கொல்வது “ஹலாலான” செயல் என்றும் ஹருஸ்ஸானி கூறியதாக பெரித்தா ஹரியான்  செய்தி  கூறியது.

ஹருஸ்ஸானி இஸ்லாத்தை நன்கு அறியாமல்  பேசி இருக்கிறார் எனவும் இஸ்லாத்தின் பெயரைக் கெடுத்து விட்டார் எனவும் பிரபல உஸ்தாஸ்  வான் ஜி வான் உசேன்    டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே மனித உரிமை வழக்குரைஞர்கள் பாடியா நத்வா பிக்ரியும் ஷாரெட்சானும், ஹருஸ்ஸானி ஆர்ப்பாட்டக்காரர்களைக் கொலை செய்யலாம் எனத் தூண்டிவிடுவது  ஒரு குற்றச்செயலாகக்கூட இருக்கலாம் எனக் கருதுகிறார்கள்.