அல்லாஹ் விவகாரத்தில் புத்ரா ஜெயா தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும்

allah“அல்லாஹ்” என்னும் சொல்லைப் பயன்படுத்துவது  தொடர்பில்  முரண்பாடான  கொள்கைகள்  இருப்பதால்  அச்சொல்லை  முஸ்லிம்-அல்லாதார்  பயன்படுத்தலாமா கூடாதா  என்பதில்  புத்ரா ஜெயா தீர்க்கமான ஒரு முடிவைச்  செய்திட வேண்டும் என  சிலாங்கூர் அரசு, விரும்புகிறது.

அவ்விவகாரத்தில்  விளக்கம் கேட்டு மாநில அரசு உள்துறை  அமைச்சுக்குக்  கடிதம் எழுதும் என  சிலாங்கூர் ஆட்சிக்குழுவில்  இஸ்லாமிய விவகாரங்களுக்குப்  பொறுப்பாக உள்ள  சலேஹான் முஹை கூறினார். 

2011-இல், அமைச்சரவை அங்கீகாரம் பெற்ற  10-அம்சத் தீர்வு, கிழக்கு  மலேசிய பைபிள்களில் “அல்லாஹ்”  என்னும் சொல்லை எந்த நிபந்தனையுமின்றி  பயன்படுத்த  அனுமதிப்பதையும்  ஆனால், தீவகற்பத்தில் பைபிள்களில் “கிறிஸ்துவர்களுக்கு மட்டுமே” என்ற முத்திரை  குத்தப்பட்டிருக்க வேண்டும்  எனக் கூறுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால், அது முஸ்லிம்-அல்லாதார் “அல்லாஹ்” சொல்லைப் பயன்படுத்தத்  தடைபோடும்  சிலாங்கூர் சுல்தான் ஆணையுடன்  முரண்படுகிறது  என்றாரவர்.