பக்தர்கள் நிர்வாணமாக காவடி எடுத்தால்…?

 

muruganதைப்பூசத்தன்று முருகப் பெருமானுக்கு காவடி எடுப்பது தைப்பூச திருவிழாவின் சிறப்பு அம்சமாகும். காவடி எடுப்பது என்பது ஒரு புதிய முறை இல்லை என்றாலும், காவடி எடுக்கும் பக்தர்கள் பின்பற்றும் வழிமுறைகள் குறித்து பல ஆட்சேபங்களும் குறைகூறல்களும் எழுந்துள்ளன.

பக்தர்கள் எடுக்கும் காவடிகள் ஒரு வரைமுறைக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும், காவடி எப்படி இருந்தால் என்ன? அது பக்தர்களின் விருப்பம் என்று இன்னொரு தரப்பினரும் வாதத்தில் இறங்கியுள்ளனர். இம்மாதம் நடைபெறவிருக்கும் தைப்பூச விழாவில் இத்தர்க்கம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது என்று கூறலாம்.

இந்நாட்டின் மிகப் பெரிய திருவிழா தைப்பூச திருவிழா. சிறுபான்மை இந்துக்கள் கொண்டாடும் இத்திருவிழா உலக மக்களை கவர்ந்துள்ளது இந்நாட்டின் பெரும்பான்மை மக்களில் பலருக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. இந்நிலையில், தைப்பூச திருவிழாவை கொண்டாடும் இந்துக்கள், குறிப்பாக காவடி எடுக்கும் பக்தர்களில் சில தரப்பினர், பின்பற்றும் நடைமுறைகளை காரணமாக வைத்து இவ்விழாவிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படக்கூடிய சூழ்நிலை உருவாகலாம் என்று அஞ்சுவோரும், தைப்பூச விழா நெறிமுறைப்படி நடத்தப்படுவது உறுதி செய்யப்படுவதை வலியுறுத்துவோரும் இப்போது தங்களுடைய நிலைப்பாட்டை முன்வைத்துள்ளனர்.

மலேசிய இந்து சங்கம் நாடு தழுவிய அளவில் நடைபெறும் தைப்பூச விழாவில் காவடி எடுக்கும் பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய முறைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் கலந்தாலோசித்து “மலேசிய நாட்டின் திருக்கோயில்கள் மற்றும் இந்து பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய தைப்பூச திருவிழாவின் வழிகாட்டி” ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ்வழிகாட்டியில் கூறப்பட்டுள்ளவை:

“அ. காவடி

  1. 1.   காவடி எடுத்தலும் வழிமுறைகளும்

1)    முருகப் பெருமானுக்கு காவடி எடுத்து அபிஷேக திரவியங்களை நேர்த்திக் கடனாக, காணிக்கைகளை திருக்கோவில்களுக்கு எடுத்துச் செல்வோர், தங்களின் ஆன்மை பலத்தைப் பெருக்கிக் கொள்ள விரதங்களை உண்ணா நோன்போடு. மெய், வாய், கண், மூக்கு. செவி ஆகிய புலன்களின் ஒடுக்கத்துடன் முருகப் பெருமானை வணங்குதல் அவசியம்.

15 நாட்கள், 30 நாட்கள், 45 நாட்கள் என வகுத்துக் கொண்ட, தங்களால் இயன்ற அளவில் சாத்வீக உணவுகளை (சைவ உணவு) உண்டு, பூஜைகள், தோத்திரங்கள், ஜபங்கள், தியானம் ஆகியவற்றுடன் ஏழை எளியவர்களுக்கு தான தர்மங்களையும் செய்து காவடி எடுக்க வேண்டும். இவற்றை கடைபிடிக்காமல் எடுக்கும் காவடிகள் சாஸ்திரப்படி தவறாகும்.

2)   காவடி எடுப்பவர்கள் முறையாக புஸ்ப காவடி, பால் காவடி, பன்னீர் காவடி, அலங்கார காவடி எடுக்கலாம். காவடிகளில் இயக்கத்தின் சின்னங்களோ அல்லது சமயத்திற்கு சார்ந்து இல்லாத எந்த ஒரு விசயத்தையும் தங்களின் காவடிகளில் இணைக்கக்கூடாது. அப்படி இருக்கும் பட்சத்தில் தங்களின் காவடிகளைச் செலுத்துவதற்கோ எடுப்பதற்கோ கண்டிப்பாக அனுமதி கிடையாது. இரத காவடி மற்றும் பறக்கும் காவடிகள் அனுமதிக்கப்படமாட்டாது.

3)   தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தும் போது அரிவாள் கத்தி, சூலம், தடி, சாட்டை, சுருட்டு, மது பானங்கள் போன்றவற்றை கண்டிப்பாக உடன் கொண்டு வரக்கூடாது. இது போன்ற பொருட்களை ஆலய வளாகத்தில் அனுமதிக்கக்கூடாது.

4)   மேலும், டுரியான் காவடி, மிளகாய் காவடி, கொடுரமாக அலங்கரிக்கப்பட்ட காவடிகள் எடுப்பதற்கும் அனுமதிக்கப்படாது.

5)   தைபூசத்திற்குக் காவடி எடுக்கும் அன்பர்கள் முனீஸ்வரன், மதுரை வீரன், சுடுகாட்டு காளி, காட்டேரி போன்ற வேடம் அணிந்து காவடிகளை எடுக்க அனுமதிக்கப்படாது. மேலும், நாக்கில் குங்குமம் அணிந்து வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

6)   அலகு காவடிகள் எடுப்பவர்கள் தங்களின் அலகு 3 அடிக்கு மேல் இருக்கக்கூடாது.

7)   தைப்பூச திருவிழா காலத்தில் ஆலயங்கள் திருக்காப்பிடும் நேரத்திற்குள் காவடிகள் செலுத்தப்பட வேண்டும். அபிஷேக காலங்களை ஆலயங்கள் முன்கூட்டியே முடிவு செய்தல் வேண்டும்.

8)   மற்ற காவடிகளுக்காக காத்திருப்பதோ அல்லது வேறு காரணங்களுக்காக திருக்காப்பை தாமதப்படுத்துவதோ முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

9)   காவடி எடுக்கக்கூடிய பக்தர்கள் கண்டிப்பாக சமய உடைகளை அணிந்து வர வேண்டும். அதனை தவிர்த்து மற்ற உடைகளை அணிந்து வந்தால் தங்களின் நேர்த்திக் கடனை ஏற்றுக் கொள்ளப்படாது.

10) காவடிகளுடன் நாதஸ்வரம், தவில், உறுமி மேலத்தோடு காவடி சிந்து மற்றும் தெய்வீக பாடல்களைப் பாடி வர வேண்டும். அதை தவிர்த்து சினிமா பாடல்களோ, ரேப் போன்ற பாடல்களைக் கண்டிப்பாக பாடி வரக்கூடாது.

11) அங்க பிரதட்சனம் செய்யக்கூடியவர்கள் ஆண்கள் மட்டுமே. பெண்கள் இதை செய்வதை தவிர்க்க வேண்டும்.

ஆ. இரத ஊர்வலம்

1) தைப்பூசத்திற்கு இரத ஊர்வலம் முக்கிய/பிரதான சாலைகளை மட்டுமே சென்று வர வேண்டுமே தவிர சிறிய சிறிய தாமான்கள் அல்லது குறிப்பிட்ட நபர்களின் வீட்டுக்கு எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் (இரவு 12.00க்குள்) இரத ஊர்வலத்தை எடுத்து வருவது நன்மை பயக்கும்.

இந்த ஊர்வலத்தின் போது தேங்காய்களை உடைக்கக்கூடிய பக்தர்கள் தேங்காய்களை பெரிய அளவில் உடைக்காமல் குறிப்பிட்ட அளவில் உடைப்பது சாலச்சிறந்தது. ஆலய நிர்வாகமும், பொதுமக்களும் உடைந்த தேங்காய்களை அப்புறப்படுத்துவதிலும் அக்கறை கொள்ள வேண்டும்.”

மேற்கூறப்பட்டுள்ள வழிகாட்டி வெளியிடப்பட்ட பின்னர், ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தான தலைவர் ஆர். நடராஜா தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

“எத்தனையோ சிரமங்கள், இடர்கள், அவற்றை நிவர்த்திக்க விரதம் இருந்து காவடிகள் எடுத்து நேர்த்திக் கடனை நிறைவேற்றுகிறார்கள் பக்தர்கள்.

nadaraja batu caves“எலுமிச்சை காவடியாகட்டும், டுரியான் பழக் காவடியாகட்டும் எதுவாக இருந்தால் என்ன? பக்தர்களின் வேண்டுதல்களுக்கு மதிப்பளிக்கும் நிதானம் அவசியம். குறிப்பாக இவர்களுக்கு நான் மீண்டும் சொல்வதெல்லாம் தைப்பூசத்தை எப்படி நடத்துவது? காவடி எடுப்பது எப்படி என்று எங்களுக்கு சொல்லித்தர வேண்டாம்” (தநே 11/1/14) என்று நடராஜா, மலேசிய இந்து சங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த அறிவுறுத்தலுக்கு பதில் அளித்த மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் மேகன் ஷான் தைப்பூச விழா நெறிமுறைப்படி கொண்டாடப்பட வேண்டும் என்பதே மலேசிய இந்து சங்கம் தயாரித்து வெளியிட்ட வழிகாட்டியின் நோக்கம் என்றார்.

நேற்று பெட்டாலிங் ஜெயாவில் மலேசிய இந்து சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் மோகன் ஷான் இவ்வாறு கூறினார்.

mohan shanமலேசிய இந்து சங்கம் வெளியிட்டுள்ள இந்த வழிகாட்டி ஆலய விவகாரங்களில் ஈடுபாடு கொண்டவர்களுடன் கலந்தாலோசித்து வரையப்பட்டது என்று கூறிய மோகன் ஷான், இவ்வழிகாட்டி வரையப்படுவதற்கு தமது முழு ஆதரவை ஆர். நடராஜா அளிப்பதாக தெரிவித்திருந்தார் என்றார்.

மேலும், ஆர். நடராஜா தமிழ் நாட்டில் இருந்த போது அவருடன் தொடர்பு கொண்டு இவ்வழிக்காட்டி குறித்து கூறியதாகவும் அதற்கு அவர் ஆதரவு அளித்ததாகவும் மோகன் ஷான் கூறினார்.

தங்களுடைய நோக்கம் எவருக்கும் எதையும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதல்ல. மாறாக, தைப்பூச திருவிழா ஆகம முறைப்படி நடத்தப்பட வேண்டும். அதில் பங்கேற்கும் பக்தர்கள் அம்முறையை தவறாமல் பின்பற்ற வேண்டும். அதனை உறுதிப்படுத்துவதற்கு பணிப்படை அமைக்கப்பட்டது. இதில் எவரையும் மட்டம் தட்டும் நோக்கம் இல்லை என்பதை மோகன் ஷான் வலியுறுத்தினார்.

காவடி எதுவாக, எப்படிப்பட்டதாக இருந்தால் என்ன என்று கூறுவது இந்து சமயத்திற்கு புறம்பான நடைமுறைகளைப் பின்பற்ற வழிவகுக்கும் என்று கூறிய மோகன் ஷான், காவடி எடுப்பவர்கள் முறையற்ற உடையுடன் நிர்வாணமாக தோன்றினால் என்னவாகும் என்று வினவினார்.

இந்நாட்டு பொருள் டுரியான். ஆகவே, டுரியான் காவடி எடுக்கலாம் என்றால், இந்நாட்டு பொருள் பிளாச்சான். பிளாச்சான் காவடி எடுக்கலாமா? எடுக்க அனுமதிக்கப்படுமா? அனுமதி கொடுப்பது முறையா? என்ற கேள்விக்கு, கட்டுப்பாடு இல்லை என்றால் எதுவும் நடக்கலாம் என்றார்.

மலேசிய இந்து சங்கம் தயாரித்து வெளியிட்டுள்ள வழிகாட்டியை ஆர். நடராஜா ஏற்றுக் கொள்ள வேண்டும் நாங்கள் வலியுறுத்துவில்லை; அது முக்கியமுமல்ல என்று கூறிய அவர், மக்கள் இதனை ஏற்றுக் கொண்டுள்ளனர். அதுதான் முக்கியம் என்றார்.

Ramajiஇராமாஜி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பணிப்படை தைப்பூச விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு வழி காட்டுமே தவிர, அவர்களுடன் தகராறு செய்யப்போவதில்லை. அப்படையின் பணி கோவில் வளாகத்திற்கு வெளியில் மட்டுமே இருக்கும் என்பதை மோகன் ஷான் தெளிவுபடுத்தினார்.

இந்து சமயத்தின் பெரு விழாவான தைப்பூசம் முறையாக நடத்தப்படுவதையும், இந்து சமயம் சரியான பாதையில் செல்வதையும் உறுதிப்படுத்துவதுதான் பணிப்படையின் நோக்கம். அப்படைக்கு மக்கள் ஆதரவு அளித்து பாதுகாப்பும் அளிப்பர் என்று மோஹன் ஷான் நம்பிக்கை தெரிவித்தார்.

மலேசிய இந்து சங்கம் தயாரித்துள்ள வழிகாட்டி போலீஸ் படையின் தலைவரிடம்  கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் நடந்த சந்திப்பில் இவ்வழிகாட்டியில் கூறப்பட்டுள்ளவை குறித்து விளக்கம் அளித்துள்ளதாக பணிப்படையின் ஒருங்கிணைப்பாளர் ஜி. குணராஜ் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

Gunaraj1போலீசார் இந்த வழிகாட்டியின் அடிப்படையில் செய்படுவர் என்று தங்களுக்கு உறுதி கூறப்பட்டுள்ளது என்றும் குணராஜ் தெரிவித்தார்.

“தேவஸ்தானம் பொறுப்பாகாது”

“எனக்கு யாரும் சொல்லித்தர தேவையில்லை” என்று மலேசிய இந்து சங்கத்திற்கு ஸ்ரீ மாகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் ஆர். நடராஜா கூறியிருந்தாலும், அவரும் காவடிகள் “மற்றவர்களுக்கு பாதிப்பும் இன்னலும் தராத வகையில் இருந்தால் எந்த ஒரு பிரச்னையும் இல்லை. போலீஸ் படை சமய விஷயங்களில் தலையிடாது, தலையிடக்கூடாது”, என்று அவருடைய செய்தியாளார் கூட்டத்தில் கூறியுள்ளார்.

மேலும், “15 லட்சம் பேர் திரள்வுள்ள இந்த தைப்பூசத்தில் பக்தர்கள் 3 அடிக்கு மேல் கன்னத்தலகு காவடி கண்டிபாக எடுக்கக்கூடாது என்றும் கத்தி, அரிவாள், சாட்டை போன்றவைகள் அங்கு கூடும் பொது மக்களுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடும் என்பதால் அவைகளை உபயோகிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துமீறிய செயல்களில் ஈடுபடுவோர் மீது போலீஸ் நடவடிக்கை எடுத்தால் அதற்கு தேவஸ்தானம் பொறுப்பாகாது”, என்று நடராஜா கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகிறார்: “காவடி மற்றும் இதர ஊர்வலங்களின் போது பக்திப் பாடல்களைத் தவிர, இதர சினிமா பாடல்களையும், பிரேக் டான்ஸ் நடனங்களையும் தவிர்க்கும் படி தேவஸ்தானம் பொது மக்களைக் கேட்டுக் கொள்கிறது. அது மட்டுமின்றி மதுபானம் போன்றவைகளை பூசத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் முற்றாக தவிர்க்க வேண்டும்.” (தநே 11/1/14)

இதே போன்ற வேண்டுகோள்தான் மலேசிய இந்து சங்கத்தின் வழிகாட்டியிலும் கூறப்பட்டுள்ளது. வேண்டுகோள் ஒன்றேதான். போட்டி: இதைச் சொல்ல நான் இருக்கையில், நீ யார் என்பதுதான்!

TAGS: