மலேசிய நண்பன் மற்றும் பூச்சோங் முரளி மீது அவதூறு வழக்கு!

K. Arumugam_Suaramமலேசியாவின் முன்னணி தமிழ் நாளிதழான மலேசிய நண்பன், அதன் ஆசிரியர் எம். மலையாண்டி, பூச்சோங் முரளி என அழைக்கப்படும் முரளி சுப்பரமணியம் ஆகியோர் மீது கா. ஆறுமுகம் அவர்கள் அவதூறு வழக்கு ஒன்றை உயர் நீதி மன்றத்தில் பதிவு செய்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 19 – ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட அவரின் அவதூறு வழக்கு மனு இம்மாதம் 20 -ஆம்  தேதி ஜலான் டுத்தா கோலாலம்பூர் உயர் நீதி மன்ற நீதிபதியின் முன் வழக்கு நிர்வாகத்திற்கு வருகிறது.

Writ pressஅந்த மூவரோடு மலேசிய நண்பனின் அப்போதைய பத்திரிக்கை நிருபரான சி. அன்பரசு என்பவரும் பிரதிவாதியாக இணைக்கப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் மார்ச் மாதம் தொடர்ச்சியாக தம்மை முன்னிலைப்படுத்தி மலேசிய நண்பன் வெளியிட்ட செய்திகள் கருத்து சுதந்திரத்திற்கு அப்பாற்பட்ட வகையிலும், நியாயமற்ற வகையிலும், தன்னை மக்கள் மத்தியில் அவமானப் படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் எழுதப்பட்டவை என தனது 108 பக்கங்கள் கொண்ட மனுவில் குறிபிட்டுள்ளார்.

மலேசிய தமிழர் ப்போரம் என்ற அமைப்புக்கு அரசாங்கம் கொடுத்த ரிம 32 லட்சம் வெள்ளியை கா. ஆறுமுகம் வாங்கியதாகவும், அதில் முறைக்கேடு நடந்துள்ளதா என்பதையும், அவரின் சொத்துக்களையும் விசாரணை செய்ய வேண்டும் என்று முரளி சுப்பிரமணியம் 1.3.2013-இல் போலிஸ் புகார் ஒன்றை செய்தார்.

murali march 24அதைத் தொடர்ந்து 2013 மார்ச் மாதம் மலேசிய நண்பன் வெளியிட்ட  ஆறு முதல் பக்க செய்திகளை தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார் ஆறுமுகம். இந்தச் செய்திகள் மக்கள் மத்தியில் தன்னை அவமானப் படுத்தும் நோக்கம் கொண்டவை என்று குறிப்பிட்டுள்ளார்.

இவை சார்பாக தன்னை போலிசார் முழு விசாரணை செய்யுமாறு பலமுறை கேட்டுக்கொண்டதாகவும் ஆனால் இதுவரை விசாரிக்க யாரும் முன் வரவில்லை என்ற அவர், இந்த வழக்கு பிரதிவாதிகள் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நிருபிக்க ஒரு தருணம் என கருதி அவர்கள் முழுமையாக வழக்கில் பங்கெடுப்பார்கள் என தான் நம்புவதாக கூறினார்.

சட்ட நடவடிக்கை மற்றும் வழக்கைச் சந்திக்க தயார் என்ற வகையில் மலேசிய நண்பன் மார்ச் 7 மற்றும் மார்ச் 24 –ஆம் தேதிகளில் முதல் பக்கச் செய்திகளாக வெளியிட்டிருந்தது எனவும் ஆறுமுகம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சுவராம் மனித உரிமை இயக்கத்தின் தலைவராகவும், சைல்டு நிறுவனம், தமிழ் அறவாரியம், மலேசிய தமிழர் ப்போரம், பெர்சே போன்ற அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளை வகிக்கும் கா. ஆறுமுகம்  கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக சுபாங் ஜெயா நகராண்மைக்கழக உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். நிபுணத்துவ பொறியியலாளரான இவர் ஒரு வழக்கறிஞரும் ஆவார்.