எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பதுதான் மலேசியர்களின் சாபக்கேடு. அப்படி இல்லாதிருந்தால் அரசியல்வாதிகள் சர்ச்சைக்குரிய விவகாரங்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு நாட்டைப் பிரித்தாளும் தந்திரத்தைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்க முடியாது என இஸ்லாத்தில் சகோதரிகள் அமைப்பின் நிறுவனர் ஜைனா அனவார் (இடம்) கூறினார்.
அவர், பணிஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி எஸ். தயாபரனின் ‘No Country for Righteous Men and Other Essays on Culture of Offendedness’ நூல் வெளியீட்டை ஒட்டி நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் பேசினார்.
வேறு பல சமூக ஆர்வலர்களும் அக்கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.
மலாயாப் பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளர் அஸ்மி ஷரோம் பேசுகையில், மலேசிய சமுதாயத்தைத் தாங்கிநின்ற ஒழுங்கமைப்பு முறைகள் எல்லாம் முதல் மூன்று பிரதமர்களுக்குப் பின் இடிந்து விழுந்தன என்றார். அதற்கு மவுனப் பெரும்பான்மையினர்தான் காரணம்.
“நடப்பது நடக்கட்டும் என்றிருந்தோம். இப்போது அனுபவிக்கிறோம்….”, என்றாரவர்.
கருத்தரங்கில் மலேசியன் இன்சைடர் செய்தி ஆசிரியர் ஜஹபர் சாதிக், வழக்குரைஞர் மன்ற முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் ஆகியோரும் பேசினார்கள்.
ஜஹபர், மலேசியர்கள். தாங்கள் அனைவரும் ஒரே நாட்டவர் என்றாலும் அதை உணர்வதில்லை என்றார்.
“அனைவருமே மலேசியர்களாக நினைக்கத் தொடங்க வேண்டும்”, எனக் கேட்டுக்கொண்டார்.
நெறியாளர் கே.ஜே. ஜோன், “மலேசியா 1பங்சா மலேசியாவாக உருவாக முடியுமா?”, என்று ஒரு கேள்வியை முன்வைத்தார்.
அதற்கு அம்பிகா பதிலளித்தார்: “முடியும். பெர்சே (பேரணி)-இல் அதைக் கண்டேன்”.
மலேசியா 1 பங்சா மலேசியா ஆகவே முடியாது…சாயா மிலாயு டூலு என்று சொல்பவர்களும் அதிகமாக இருக்கும்வரை முடியாது. ரமேஷும் சொங் பாட்டும் ரஷீட் வீட்டில் போய் உணவருந்துவார்கள், அவர்களால் முடியும். ஆனால், ரஷீட் ரமேஷ் வீட்டிலோ சொங் பாட் வீட்டிலோ உணவருந்த மாட்டார், முடியாது. நாசி கண்டார் கடையில் வேண்டுமானால் அவர்கள் கூடி சாப்பிடலாம். எப்படியா 1 பங்சா மலேசியா தோன்றும்.