சீபோர்ட் தமிழ்ப்பள்ளி தற்போது இருக்கும் இடத்திலேயே நிலைநிறுத்துவதற்காக போராட்டம் நடத்தும் அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு தங்களுடைய ஆதரவை தெரிவிப்பதற்காக எஸ்ஜேகே(சி) டாமான்சாரா சீனப்பள்ளியை காப்பாற்றுவதற்காக அமைக்கப்பட்ட “Save Our School” போராட்டக் குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் நேற்று சீபோர்ட் தமிழ்ப்பள்ளிக்கு வருகையளித்தனர்.
சீபோர்ட் தமிழ்ப்பள்ளிக்கு நேற்று வருகை மேற்கொண்ட குழுவினரில் டாமான்சாரா சீனப்பள்ளி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பல முன்னாள் உறுப்பினர்கள் இருந்தனர். அவர்களில் அதன் ஆலோசகர்கள் தாங் ஆ சாய் மற்றும் போக் தாய் ஹீ ஆகியோருடன் முன்னாள் இடைக்கால தலைவர் ஹியு வாவும் அடங்குவர்.
சீபோர்ட் தமிழ்ப்பள்ளியின் நடப்பு தலைமை ஆசிரியர் ஜி. முருகேசு மற்றும் மலேசிய தமிழன் டுடே அமைப்பின் தேசிய செயலாளர் கே. குண்சேகரன் ஆகியோரைச் சந்தித்து இப்பள்ளி விவகாரத்தின் தற்போதைய நிலவரத்தை கேட்டு தெரிந்து கொண்டனர்.
அதன் பின்னர், சீபோர்ட் தமிழ்ப்பள்ளியின் போராட்டத்திற்கு தங்களுடைய ஆதரவை பகிரங்கமாக தெரிவிக்கும் பொருட்டு அவர்கள் பள்ளியின் முதன்மை நுழைவாயிலின்முன் ஒரு பதாகையை ஏந்தி நின்றனர். அந்த பதாகை பின்னர் அப்பள்ளியின் வளாகத்தில் சாலையின் எதிர்புரத்தில் தொங்கவிடப்பட்டது.
சீபோர்ட் தமிழ்ப்பள்ளி அமைந்திருக்கும் நிலம் பிகேஎன்எஸ்சுக்கு சொந்தமானது என்ற காரணத்தை முன்வைத்து அப்பள்ளி அங்கிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள புதிய கம்போங் லிண்டுங்கானுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில கல்வி இலகா அறிவித்தது.
சிலாங்கூர் மாநில அரசு அந்த நிலத்தை சீபோர்ட் தமிழ்ப்பள்ளிக்கு ஒதுக்கி அதனை கெஜட்டில் பதிவு செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ள போதிலும், மத்திய அரசாங்க அதிகாரிகள் சீபோர்ட் தமிழ்ப்பள்ளி இடம் மாற வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
இதுவரையில், சிலாங்கூர் அரசாங்கமும் அந்த நிலம் சம்பந்தமாக எந்த ஒரு திட்டவட்ட முடிவௌயும் எடுக்கவில்லை.
“பள்ளி அங்கேயே இருக்கட்டும்”
மலேசியகினியிடம் பேசிய தாங், சீபோர்ட் தமிழ்ப்பள்ளி அது தற்போது இருந்து வரும் இடத்திலேயே இருப்பதற்கு அனுமதிக்குமாறு சிலாங்கூர் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார். அதே வேளையில், கம்போங் லிண்டுங்கானில் புதிய பள்ளிக்கூடம் கட்டலாம் என்று கூறினார். தாங் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன அசெம்பிளி ஹாலின் (கேஎல்எஸ்எஎச்) தலைமை செயல் அதிகாரிமாவார்.
பழைய மற்றும் புதிய பள்ளிகள் எவ்வித முரண்பாடுகளுமின்றி இரு பக்கங்களிலுமுள்ள மக்கள் கல்வி சேவையை வழங்க ஒன்றித்து செயல்படாம் என்று தாங் கூறினார்.
சீபோர்ட் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்கொண்டுள்ள அனைத்து பிரச்னைகளையும், அவர்கள் ஏன் தங்களுடைய பிள்ளைகளை புதிய பள்ளி அனுப்ப மறுக்கின்றனர் என்பதையும் பொதுமக்களுக்கு, குறிப்பாக சீன சமூகத்தினருக்கு, தெரியப்படுவதற்காக கேஎல்எஸ்எஎச் ஒரு கலந்துரையாடளுக்கான வசதியை ஏற்பாடு செய்யும் என்று தாங் மேலும் கூறினார்.
சீபோர்ட் தமிழ்ப்பள்ளியில் கல்வியைத் தொடரும் மாணவர்களின் படிப்பிற்கு எவ்வித தடங்களும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக கேஎல்எஸ்எஎச் ஒரு நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் என்றும் அவர் கூறினார்.
“பள்ளியின் கற்பித்தல் மற்றும் கற்றல் நடவடிக்கை நிறுத்தப்பட்டக் கூடாது. அதற்கு தேவையான ஆசிரியர்கள் மற்றும் அவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான நிதி வசதிகள் உறுதியானதாக இருக்க வேண்டும். தன்னார்வல ஆசிரியர்களை நாம் நம்பி இருக்க முடியாது. அவர்களுக்கும் வருமானம் தேவைப்படுகிறது”, என்று தாங் கருத்துரைத்தார்.
மேலும், டாமன்சாரா சீனப்பள்ளி நடவடிக்கை குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் தங்களுடைய அனுபவத்தை சீபோர்ட் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களோடு பகிர்ந்துகொள்வர் என்றார்.
பெயர்தான் தமிழ் பள்ளி வுரிமை போராட்டம் ஆனால் பேனரில் தமிழ் எழுது கிடையாது .
கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பதுபோல தமி்ழ் பள்ளியை வைத்து பிழைப்பு நடத்தும் இவர்கள் தமி்ழ்ப் பள்ளிக்கு . தமிழ் மாணவர்களுக்கு எதாவது செய்துள்ளார்களா???
எது செய்தாலும் குற்றம் தானா?