பதற்ற நிலை மே 13 அளவை நெருங்கி விட்டது, அன்வார் எச்சரிக்கை

 

Anwar - Consensus1இந்நாட்டில் பதற்ற நிலை மே 13 க்கு முந்திய கலவர அளவை எட்டியுள்ளது என்று கூறிய எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் ஆளும் கூட்டணியுடன் ஒரு தேசிய உடன்பாடு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

“மே 13, 1969 ஆம் ஆண்டில் நிகழ்ந்த தேசிய பேரிடருக்குப் பின்னர் இப்போது உருவாகிக் கொண்டிருக்கும் பதற்ற நிலையை நாம் கண்டதில்லை.

“காழ்ப்பு மற்றும் பகைமையின் குரல்கள், தப்பெண்ணம் மற்றும் ஐயத்தின் குரல்கள், நாசம் மற்றும் பாழாக்கும் குரல்கள் நாம் அந்த தேசிய பேரிடரால் ஏற்பட்ட நாசத்திலிருந்து உருவாக்கிய நல்லிணக்கம், ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வு ஆகியவற்றை மூழ்கடித்து மாளச்செய்ய முயல்கின்றன”, என்று அன்வார் இன்று சுபாங்கில் ஆற்றிய ஒரு சிறப்பு உரையில் கூறினார்.

பூசலைத் தீர்த்து நல்லிணக்கம் ஏற்படுவதற்கு எதிரணி மீண்டும் மீண்டும் விடுத்த அழைப்பை ஆளும் கூட்டணி உதாசீனப்படுத்தி விட்டதை ஒப்புக்கொண்ட அன்வார் இப்ராகிம், அதன் காரணமாக இப்போது மக்களை, பிஎன் ஆதரவாளர்கள் உட்பட, சந்திக்கிறோம் என்றார்.

“எனது சக மலேசியர்களே, எழுச்சி பெறுங்கள், உங்களுடைய குரல்களை செவிமடுக்கச் செய்யுங்கள்:, என்று அன்வார் அறைகூவல் விடுத்தார்..