பதற்ற நிலைக்கு பினாங்கு அம்னோ காரணமல்ல

penangபினாங்கு  அம்னோ, அங்கு பதற்றமிக்க  சூழல்கள்  உருவானதற்கு  அதுதான்  காரணம்  என்று  கூறப்படுவதை  மறுத்துள்ளது.  ஆனால்,  பதற்றத்தை  உண்டுபண்ணியவர்களின்  மனநிலையைப்  புரிந்துகொண்டிருப்பதால்  அவர்களுக்கு  ஆதரவளிப்பதாக  அது  கூறிக்கொண்டது. 
செபராங்  ஜெயாவிலும்  அல்மாவிலும் நடந்த  பேரணிகளுக்கும்  தனக்கும்  தொடர்பில்லை  என்று  கூறிய  அது,  ஜனவரி  18  பேரணியில்,  ‘டிஏபி  தலைவர்களின்  கெட்ட  வாயால்தான்  மே 13  நிகழ்ந்தது………இன்னும்  கொஞ்சம்  வேண்டுமா?’  என்ற  வாசகத்தைக்  கொண்ட பதாதைகள்  காணப்பட்டதற்கும்  ஜனவரி  19 பேரணியில்  வன்முறை  மூண்டதற்கும்  தான்  பொறுப்பல்ல  என்றும்  மறுப்புத்  தெரிவித்துள்ளது.

“பிரதமரை  அவமதிக்கும்  கூட்டம்  நடக்காமலிருந்தால்  அவ்விரு  பேரணிகளுமே  நடந்திருக்காது.  அது  சினமூட்டியது.  அதன்  விளைவுதான்  இது”, என நேற்று  பினாங்கில்  செய்தியாளர்  கூட்டமொன்றில்  மாநில  அம்னோ  தொடர்புக்  குழுத்  தலைவர்  சைனல்  அபிடின்  ஒஸ்மான்  கூறினார்.

“பதாதை  ஏந்தியவர்களின்  மனவலியை  எங்களால்  புரிந்துகொள்ள  முடிகிறது. அவர்கள்  தேர்ந்தெடுக்கப்பட்ட  டிஏபி  அரசால்  இத்தனை  ஆண்டுகளாக  பாதுகாக்கப்படாமல்  ஒடுக்கப்பட்டவர்கள்,  அவமதிக்கப்பட்டவர்கள்”,  என்றாரவர்.