வான் முகம்மட் அஸ்ரி வான் டெரிஸ் அல்லது பாபாகோமோ, பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் தமக்கு எதிராக தொடுத்துள்ள ரிம100மில்லியன் அவதூறு வழக்கை ஒத்திவைக்க செய்துகொண்ட விண்ணப்பத்தை கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் நிராகரித்தது. மேலும் ஒரு சாட்சியைக் கொண்டுவருவதற்காக வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டிருந்தார்.
“வான் முகம்மட் மேலும் அவகாசம் கேட்டார். ஆனால், நீதிமன்றம் மறுத்துவிட்டது. அது சாட்சியை இன்று அழைத்து வருமாறு ஏற்கனவே கூறி இருந்தது”, என அன்வாரின் வழக்குரைஞர் லத்திபா கோயா கூறினார்.
நேற்று வான் முகம்மட் அஸ்ரி தாம் அம்னோ-ஆதரவு வலைப்பதிவர் பாபாகோமோ என்று கூறப்படுவதை மறுத்தார். பாபாகோமோ யார் என்பதைச் சரியாக அடையாளம் காட்டக்கூடிய ஒரு சாட்சியை அழைத்துவர தமக்கு அவகாசம் தேவை என்றும் அவர் கூறினார்.
வான் முகம்மட், கடந்த ஆண்டு மார்ச் மாதம் இணையத்தில் பதிவேற்றி இருந்த சில பதிவுகளுக்காவும் படங்களுக்காகவும் அவர்மீது அன்வார் வழக்கு தொடுத்துள்ளார். அவை அன்வார் இப்ராகிம் காமக் களியாட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் என்று குறிப்புக் காட்டுவதுபோல் அமைந்திருந்தன.
அப்பதிவுகளால் தம் பெயர் கெட்டுப்போனதாகவும் அவை தம்மை ஒழுக்கமற்ற தலைவர் எனச் சித்திரித்துக் காட்ட முயல்வதாகவும் அன்வார் நேற்று சாட்சியமளிக்கையில் கூறினார்.