கிறிஸ்துவர்கள் முஸ்லிம்களை ஏமாற்றப் பார்க்கிறார்களா? ஜாக்கிமால் நிரூபிக்க முடியுமா?

mpமலேசிய  இஸ்லாமிய   மேம்பாட்டுத்  துறை (ஜாக்கிம்)  கிறிஸ்துவர்கள் முஸ்லிம்களை  ஏமாற்ற  முயல்வதாகக்  கூறுவதை  ஆதாரத்துடன்  நிரூபிக்க  வேண்டும்  என சாபா  எம்பி  ஒருவர்  கோரிக்கை  விடுத்திருக்கிறார்.

ஜனவரி  31-இல் ஜாக்கிமால்  தயாரிக்கப்பட்ட  வெள்ளிக்கிழமை  தொழுகையுரையில்  யூதர்களும் கிறிஸ்துவர்களும்  தவறான  பாதையைக்  காண்பித்து  எமாற்றப்  பார்க்கிறார்கள்  என்றும்  அதற்கெதிராக  முஸ்லிம்கள்  விழிப்பாய்  இருக்க  வேண்டும்  என்று   குர்ஆன்  நினைவுறுத்துவதாகவும்  கூறப்பட்டதாக பெனாம்பாங்  எம்பி  டேரெல்  லெய்கிங்  கூறினார்.

அதை ஒரு  கடுமையான  குற்றச்சாட்டு  என்று  வருணித்த  டேரல், அதைக்  கவனிக்காது  விட்டால்  நாட்டில்  அது  முஸ்லிம்களும்  முஸ்லிம்-அல்லாதாருக்குமிடையில்  பகையை  வளர்த்து  சமயச்  சண்டைகளுக்கு  இட்டுச்  சென்று  விடலாம்   என  எச்சரித்தார்.

“கிறிஸ்துவர்கள்  முஸ்லிம்களை  ஏமாற்றுகிறார்கள்  என்பதற்கு  ஜாக்கிம்  உடனடியாக  ஆதாரம்  காண்பிக்க  வேண்டும்”.

அவ்விவகாரம்  மீது  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  “உடனடியாக  வெளிப்படையான  விசாரணைக்கும்”  உத்தரவிட  வேண்டும்  என  பிகேஆர்  துணைத்  தலைமைச்  செயலாளருமான  டேரல்  கேட்டுக்கொண்டார்.