பக்காத்தான்: நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனங்களின் சலுகைகளை மறுஆய்வு செய்ய வேண்டும்

toll2014-இல் நெடுஞ்சாலை  கட்டண  உயர்வை  முடக்கிப்  போடுவது  ஒரு  தற்காலிக  நடவடிக்கைதான்.  அரசாங்கம்  சாலைப் பராமரிப்பு  நிறுவனங்களுக்குத்  தொடர்ந்து  இழப்பீடு  கொடுத்துக்  கொண்டிருக்க  முடியாது  என  பக்காத்தான்  ரக்யாட்  கூறியது.

அதற்குப்  பதிலாக  அரசாங்கம்  அந்நிறுவனங்களுடன்  செய்துகொள்ளப்பட்ட  ஒப்பந்தங்களை  மறு ஆய்வு  செய்ய  வேண்டும்  என   அக்கூட்டணி  கேட்டுக்கொண்டது.  அவ்வாறு  செய்வதன்வழி  நெடுஞ்சாலை  கட்டணம்  வசூலிக்க  சலுகை  பெற்ற  நிறுவனங்கள்   முதலீட்டைத்  திரும்பப்  பெற்ற  பின்னரும்  சாலைக்கட்டணத்தை  உயர்த்திக்கொண்டே  போவதைத்  தடுக்க  முடியும்.    

ஒப்பந்தங்களை  மறு ஆய்வு  செய்யும்போது  இரண்டு   கூறுகளைக்  கவனத்தில்  கொள்ள  வேண்டும்  என  பிகேஆர்  வியூக  இயக்குனர்  ரபிஸி  ரம்லி  குறிப்பிட்டார்.  நிறுவனங்களுக்கு  முதலீடு  செய்த  பணம்  திரும்பக்  கிடைத்துவிட்டதா  என்று  ஆராய  வேண்டும். நெடுஞ்சாலைகளைப்  பயன்படுத்தும்  வாகனங்களின்  எண்ணிக்கையையும்  நெடுஞ்சாலைகளைப்  பராமரிக்க  ஆகும்  செலவையும்  கணக்கிட  வேண்டும்  என்றாரவர்.

நெடுஞ்சாலை  பராமரிப்பு  நிறுவனங்கள்  பல,  50-60 விழுக்காடு  ஆதாயம்  காண்பதாக  தெரிகிறது  என்று  கூறிய  அவர்,  இது  அந்த  ஒப்பந்தங்கள்  ஒருதரப்புக்கு  மட்டுமே  சாதகமாக  இருப்பதைக்  காட்டுகிறது  என்றார்.