கன்னத்தில் அறைந்தால் காசு என்ற அறிவிப்பு குறித்து பிரதமர் பேசாமலிருப்பது அதிர்ச்சியளிக்கிறது

1 rewardசிபூத்தே  எம்பி  தெரேசா  கொக்கை  கன்னத்தில்  அறைவோருக்கு  ஒரு  என்ஜிஓ  ரொக்க  வெகுமதி  கொடுக்க  முன்வந்திருக்கும்  செயலுக்கு  எதிராக  போலீஸ்  நடவடிக்கை  எடுக்க  வேண்டும்  என  சரவாக்  டிஏபி வலியுறுத்தியுள்ளது.

“ஒரு  குற்றச்செயல்  நடப்பதற்கு  வெகுமதி  கொடுக்கும்  செயல்  மலேசியாவில்  இதற்குமுன்  நடந்ததில்லை”,  என  சரவாக்  டிஏபி  தலைவர்  சொங்  சியங்  ஜென்  கூறினார்.

கோலாலும்பூரில்  நடந்த  ஒரு  ஆர்ப்பாட்டத்தின்போது  மலேசிய  முஸ்லிம்  பயனீட்டாளர்  சங்கம் (பிபிஐஎம்), தெரேசா  கொக்  கன்னத்தில்  அறைந்து  அதைப்  படம்பிடித்துக்  காட்டினால்  ரிம500 வெகுமதி  கொடுப்பதாக  அறிவித்தது.  பின்னர்  வெகுமதித்  தொகை  ரிம1,200  ஆக  உயர்த்தப்பட்டது.

“அப்படி  வெகுமதி  கொடுப்பதாக  அறிவிப்பதே  ஒரு  குற்றச்  செயலாகும்.

“போலீஸ்  அவர்களுக்கு  எதிராக  நடவடிக்கை  எடுக்க  வேண்டும்”,  என்றவர்  கேட்டுக்கொண்டார்.

கன்னத்தில்  அறைந்தால்  காசு  என்று  அறிவிக்கப்பட்டு  24-மணி  நேரத்துக்கு  மேல்  ஆன  பிறகும்  அது  பற்றி  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கும்  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசினும்  உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடியும்  கருத்துரைக்காமல்  மவுனமாக  இருப்பதைப்  பார்க்கையில்  இந்தக்  குற்றச்செயலை  அவர்களும்  ஆதரிப்பதுபோல்  தெரிகிறது  என  சொங்  கூறினார்.