புக்கிட் தெங்கா போலீஸ் நிலையத்தில் வீசப்பட்டது சக்திவாய்ந்த பட்டாசு

1 explosiveஇன்று  காலை  அடையாளம்  தெரியாத  நபர்கள்  வீசி  எறிந்த   ‘மெர்சுன்  போலா(சக்திவாய்ந்த  பட்டாசு)’வால்  புக்கிட்  மெர்தாஜாம்  புக்கிட்  தெங்கா  போலீஸ்  நிலையத்தின்  நுழைவாயிலும்  காவல்  கூண்டும்  சேதமடைந்தன. 

அச்சம்பவம்   அதிகாலை  மணி  4.50-க்கு  நிகழ்ந்ததாக  பினாங்கு  சிஐடி  துணைத்  தலைவர்  ஏசிபி   நாசிர்  சாலே  கூறினார்.  அப்போது  நான்கு  போலீஸ்காரர்ர்கள்  நிலையத்தில்  இருந்தனர்.  ஆனால்  அவர்களில்  யாரும்  காயமடையவில்லை.

1 explosive1“தொடக்கநிலை  விசாரணையிலிருந்து  மோட்டார்  சைக்கிள்களில்  வந்த  சந்தேகப்  பேர்வழிகள் பல ‘மெர்சுன்  போலா’  பட்டாசுகளை  ஒன்றாகக்  கட்டி  வீசி  எறிந்துவிட்டு  தப்பி  ஓடியதாக  தெரிகிறது.  எல்லாமே  மிக  வேகமாக  நடந்து  முடிந்திருக்கிறது”,  என்றவர்  சொன்னார். 

அத்தாக்குதலுக்கான  நோக்கம்  தெரியவில்லை  என்றும்  விசாரணை  தொடர்கிறது  என்றும்  நாசிர்  கூறினார். 

“போலீஸ்  நிலையத்தில்  கண்காணிப்பு  கேமிரா  கிடையாது. அப்பகுதியில்  மற்ற  இடங்களில் உள்ள  சிசிடிவி  பதிவுகளிலிருந்து  தகவல்கள்  பெறப்படும்”,  என்றாரவர்.