சமரசப் பேச்சுக்களில் சாபா, சரவாக்கையும் சேர்த்துக் கொள்க

1 jefferyதேசிய  சமரசம்,  தேசிய  இணக்கம்  காணும்  பேச்சுக்களில்  சாபா.  சரவாக்  ஆகியவற்றையும்  சேர்த்துக்  கொண்டால்தான்  பேச்சுக்கள்  அர்த்தமுள்ளதாக  இருக்கும்  என  சாபாவின்  மாநில  சீரமைப்புக்  கட்சி (ஸ்டார்) கூறியுள்ளது. 

சமய  உரிமைகளுக்கும்  இன  நல்லிணக்கத்துக்கும்  மிரட்டலாக  இருக்கும்  விவகாரங்கள்  குறித்து  இருதரப்பு  விவாதம்  நடத்தப்பட  வேண்டும்  என்று  பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  பரிந்துரைத்திருப்பது  பற்றிக்  கருத்துரைத்தபோது  ஸ்டார்  தலைவர்  ஜெப்ரி  கிட்டிங்கான்  இவ்வாறு  கூறினார்.

அன்வாரின்  பரிந்துரையை  பிஎன்  தலைவரும்  பிரதமருமான  நஜிப்  அப்துல்  ரசாக்கும்  வரவேற்றிருக்கிறார்.

“சாபா,  சரவாக்கில்  பிரச்னைகள்  இல்லாததுபோலவும்,  அவை  தேசிய  பிரச்னைகள்  அல்ல  என்பதுபோலவும்  நடந்துகொள்ளக்கூடாது…….அங்குள்ள  பிரச்னைகள்  பலவும்  நாடு  முழுவதையும்  பாதிக்கக்கக்  கூடியவைதாம்”,  என்று  ஜெப்ரி  குறிப்பிட்டார்.

சாபா,  சரவாக்  பிரச்னைகளுக்குத்  தீர்வு  காணப்படாவிட்டால்  கூட்டரசு  உடையலாம்  என்றும்  அவர்  எச்சரித்தார்.

மலேசியா  என்றால்  அது  தீவகற்பம்தான்  என்றும்  மலேசிய  நாட்டவர்  என்றால்   மலாய்க்காரர்,  சீனர்கள்,  இந்தியர்கள்  மட்டுமே  என்று  நினைப்பதையும்  சாபா,  சரவாக்  மக்களை  மற்றவர்களாகக்  கருதுவதையும்  கைவிட  வேண்டும்  என்றவர்  கேட்டுக்கொண்டார்.