மிரட்டலைக் கண்டு அஞ்சவில்லை தெரேசா கொக்

1 thersaசிபூத்தே  எம்பி  தெரேசா  கொக்,  தம்  கன்னத்தில்  அறைந்தால்   வெகுமதி  என்று  அறிவிக்கப்பட்டதைப்  பற்றி  என்ன  நினைக்கிறார்?

“அந்த  மிரட்டல்  குறித்து  போலீஸ்  படைத்  தலைவருக்கும்  உள்துறை  அமைச்சருக்கும்  கடிதம்  எழுதுவது  பற்றி  என்  சகாக்களுடன்  விவாதித்தேன்.

“ஆனால்,  இரண்டு  நாள்களுக்குப்  பிறகு (அஹமட்)  ஜாஹிட் (ஹமிடி) என் கன்னத்தில்  அறைந்தால்  மட்டுமே  விசாரணை  செய்ய  முடியும்  மற்றபடி  அது  ஒரு  கொலை  மிரட்டல்  அல்ல  என்று  கூறினார்.  அதை  நாங்கள்  எதிர்பார்க்கவில்லை.

“உள்துறை  அமைச்சர்  அப்படிச்  சொன்னது  மிகவும்  ஏமாற்றமாக  இருந்தது. ‘இப்படி  எல்லாம்கூட  அமைச்சர்கள்  இருக்கிறார்களே’ என்ற  எண்ணம்தான்  வந்தது. 

“அவருடைய  இடத்தில்  நான்  இருந்தால்  எவ்வளவு  நன்றாக  இருக்கும்  என்றுகூட  நினைத்தேன்.  நிச்சயம்  அவரை  விடவும்  சிறப்பாகவே  வேலை  செய்வேன்”,  என்றாரவர். 

13வது  பொதுத்  தேர்தலில்  மிகப்  பெரிய  பெரும்பான்மையைப்  பெற்றவர்  கொக்  என்பது  குறிப்பிடத்தக்கது. 51,552   வாக்குகள்  பெரும்பான்மையில்  சிபூத்தே  தொகுதியை  வென்றவர்  அவர். 

கன்னத்தில்  அறையும்  மிரட்டலால்  கொக்  கலக்கமடையவில்லை. மேலும்,    மிரட்டல்  என்பது  அவருக்குப்  புதிதுமல்ல. 

2008-இல்,  அவரது  வீட்டுக்குள்  இரண்டு  பெட்ரோல்  குண்டுகள்  வீசப்பட்டன.

அப்போதே  அஞ்சவில்லை.  இப்போது  அஞ்சுவாரா? 

“அதைக்  கண்டெல்லாம்  அஞ்சவில்லை,  மிரட்டலுக்குப்  பின்னரும்  எப்போதும்போலவே  இருக்கிறேன்.  என்  பணியைத்  தொடர்கிறேன்”,  என்றாரவர்.