ஊடகங்கள் இதற்குமுன் இவ்வளவு சுதந்திரமாக இருந்ததில்லை

mediaமலேசியாவில்  ஊடகங்கள்,  நஜிப் அப்துல்  ரசாக்  நிர்வாகத்தில்தான்  “முன் எப்போதையும்விட  சுதந்திரமாக  செயல்படுகின்றன”  எனப்  பிரதமர்துறை  அலுவலகம்  கூறுகிறது.

நேற்று  வெளியிடப்பட்ட   எல்லைகளற்ற  செய்தியாளர்  அமைப்பின்  பத்திரிகைச்  சுதந்திரம்  மீதான  தரப்பட்டியலில்  மலேசியா  மேலும்  இரண்டிடங்கள்  குறைந்து  மிகவும்  தாழ்ந்த  நிலைக்குச்  சென்றிருக்கும்  நிலையில்  அது  இவ்வாறு   கூறியது. 

“மலேசியச்  செய்தித்தளங்களுக்கு  அல்லது  அரசியல்  வலைப்பதிவுகளுக்குச்  செல்லும்  எவரும்  இணையத்தில்  ஊடகங்கள்  எவ்வளவு  சுதந்திரமாக  இயங்குகின்றன  என்பதைத்  தெரிந்துகொள்ளலாம்”,  என்று  பிரதமர்துறை  அலுவலகம்  வெளியிட்ட  அறிக்கை  கூறிற்று. 

நஜிப்  ஆட்சியில்  பிரசுர  ஊடகங்களுக்கான  உரிமங்களை  ஆண்டுதோறும்  புதுப்பிக்கும்  விதி  தளர்த்தப்பட்டிருக்கிறது. உரிமங்கள்  இரத்துச்  செய்யப்பட்டாலோ  உரிமங்கள் மறுக்கப்பட்டாலோ  நீதிமன்றத்தில்  நீதி  பெறும்  வசதியும்  உண்டு  என்று  அது  கூறியது.